Published : 12 Jul 2022 11:31 PM
Last Updated : 12 Jul 2022 11:31 PM

மாநிலங்களின் வளர்ச்சியில் நாட்டை வளர்ச்சியடைய செய்யும் கொள்கையுடன் பணியாற்றுகிறோம் - பிரதமர் மோடி 

தேவ்கர்: சாமான்ய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்போது தேசிய சொத்துகள் உருவாக்கப்படுவதோடு, தேச வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜார்கண்ட் மாநிலம் தேவ்கர் நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை ரூ.16,800 கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பயஸ், முதல்வர் ஹேமந்த் சோரன், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கூறியதாவது: "பாபா பைத்யநாத்தின் ஆசிகளோடு, ரூ.16,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள திட்டங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டு இருப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள், ஜார்க்கண்டின் அதிநவீன இணைப்பு வசதி, எரிசக்தி, சுகாதாரம், இறை நம்பிக்கை மற்றும் சுற்றுலாவுக்கு பெரும் ஊக்கமளிக்கும்.

மாநிலங்களை வளர்ச்சியடைய செய்வதன் மூலம், நாட்டை வளர்ச்சியடைய செய்வது என்ற கொள்கையுடன் நாங்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். கடந்த 8 ஆண்டுகளில் ஜார்க்கண்டை நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து என அனைத்து வழிகளிலும் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய சிந்தனை மற்றும் உணர்வு மிக முக்கியமானதாகும். இந்த வசதிகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஆக்கப்பூர்வ விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.

ஜார்க்கண்ட் மாநிலம், இன்று அதன் இரண்டாவது விமான நிலையத்தை பெற்றிருக்கிறது. இது பாபா பைத்யநாத் பக்தர்களுக்கான வசதியை மேலும் எளிமைப்படுத்த உதவிகரமாக இருக்கும். உடான் திட்டத்தின் கீழ் சாமான்ய மக்கள் குறைந்த செலவில் விமான பயணம் மேற்கொள்ள செய்யும் வகையில், அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனை நாடு முழுவதும் தற்போது காண முடிகிறது.

உடான் திட்டத்தின் கீழ் கடந்த 5 - 6 ஆண்டுகளில் 70 இடங்களில் புதிய விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் மற்றும் நீர்வழி விமான தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது சாதாரண குடிமக்களும், 400-க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்களில் விமான பயணம் மேற்கொள்ளும் வசதியை பெற்றுள்ளனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மிக குறைந்த செலவில் முதன் முறையாக விமான பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தியோகரிலிருந்து இன்று கொல்கத்தாவிற்கு விமான போக்குவரத்து தொடங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியளிக்கிறது. விரைவில் ராஞ்சி, டெல்லி, பாட்னாவிற்கும் விமானங்கள் இயக்கப்படும். பொக்காரோ மற்றும் தும்காவிலும், விமான நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இணைப்பு வசதிகளுடன், நாட்டில் ஆன்மிகம் மற்றும் இறை நம்பிக்கை தொடர்பான முக்கிய இடங்களில் புதிய வசதிகளை ஏற்படுத்துவதிலும், மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. பிரசாத் (PRASAD) திட்டத்தின் கீழ் பாபா பைத்யநாத் கோவிலில் பல்வேறு நவீன வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. திட்டங்களுக்கு முழுமையான அனுகுமுறை வழிகாட்டும்போது, சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளிலும், வருமானத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாவதுடன், புதிய வசதிகள், புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

பற்றாக்குறையை வாய்ப்புகளாக மாற்றுவதற்காக பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இந்திய எரிவாயு ஆணையத்தின் ஜக்தீஸ்பூர்- ஹால்டியா- பொக்காரோ எரிவாயு குழாய் வழித்தடத்தில், பொக்காரோ- அங்கூல் பிரிவு, ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள 11 மாவட்டங்களில் நகர்ப்புற எரிவாயு விநியோக கட்டமைப்பை விரிவுபடுத்தும்.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையை பெறுவோம் மற்றும் அனைவரும் முயற்சிப்போம் என்ற தாரக மந்திரத்தை அரசு பின்பற்றி வருகிறது. கட்டமைப்பு துறையில் முதலீடு செய்வதன் மூலம், வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்புக்கான புதிய வழிகள் கண்டறியப்படுகிறது. வளர்ச்சிக்கான எதிர்பார்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து, முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

சுதந்திரம் அடைந்த பிறகும் இதுவரை மின்சார வசதி பெறாத தொலைதூர பகுதிகளில் மொத்தமுள்ள 18,000 கிராமங்களில் பெரும்பாலான கிராமங்கள், மின் இணைப்பை பெற்றிருக்கின்றன.குழாய் வழி குடிநீர் இணைப்பு, சாலை மற்றும் எரிவாயு இணைப்புகளை வழங்குவதை கடந்த 8 ஆண்டுகளாக ஒரு இயக்கமாக அரசு மேற்கொண்டு வருகிறது.

இப்போது பெரிய நகரங்களுக்கு அப்பாலும் நவீன வசதிகள் பரவி வருகிறது. சாமான்ய மக்களின் வாழ்க்கையை எளிதாக்க நடவடிக்கை எடுக்கும் போது, தேசிய சொத்துக்கள் உருவாக்கப்படுவதோடு, தேச வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகிறது. இதுவே, சரியான வளர்ச்சி, இந்த வளர்ச்சியை நாம் கூட்டாக விரைவுபடுத்த வேண்டும்" என்று பிரதமர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x