

"மனநலம் என்பது மிக முக்கியமான ஒன்று. மனிதனுக்கு உடல், மனம், சமூக ஆரோக்கியம் (Social Health) மூன்றுமே முக்கியம். உடலில் எதாவது பிரச்சினை என்றால், உடனே மருத்துவமனை செல்லும் மக்கள், மனதிற்கு பிரச்சினை என்றால் மட்டும் மருத்துவமனை செல்வதை பெரும்பாலும் விரும்பவில்லை என்று சொல்வதைவிட, மனநல மருத்துவரையோ அல்லது மனநலஆலோசகரையோ சந்திப்பது அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்தால் அசிங்கம் என்றுதான் பரவலாக இன்றும் நினைக்கிறார்கள். நம்மிடம் மனநலம் குறித்த தெளிவு இன்னமும் முழுமையாக இல்லை" என்கிறார் மனநல மருத்துவர் செல்வராஜ்.
உடல் ஆரோக்கியம் தெரியும். மன ஆரோக்கியம் தெரியும். அதென்ன சமூக ஆரோக்கியம்? நம்மில் யாரெல்லாம் சமூக ஆரோக்கியமின்றி பாதிக்கப்பட்டுள்ளோம்? - இந்தக் கேள்விகளுடன், மனநல மருத்துவர் செல்வராஜை அணுகியபோது, அவர் எளிய முறையில் தெளிவுபடுத்தியதுடன், நாம் சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள 5 எளிய கட்டளைகளையும் பின்பற்ற முன்மொழிந்தார். இதுகுறித்து அவர் விவரித்தவை:
"சமூக ஆரோக்கியமின்றி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்கள் பெற்றோரிடம், உடன் படிப்பவர்களிடம், சகோதர - சகோதரிகளிடம் யாரிடமும் அதிகமாக பேச மாட்டார்கள். சிலர் தன்னுடன் பழக்கப்பட்ட ஒரு சிலரைத் தவிர வேறு யாருடனும் பேச மாட்டார்கள். இவர்களுக்குள் ஓர் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும். 'எங்கே தன்னை கிண்டல் செய்து விடுவார்களோ', 'ஏதேனும் தவறாக பேசி விடுவோமோ' என யோசிப்பவர்கள். மற்றவர்களுடன் பேசத் தயங்குவார்கள்.
சிறு வயதிலே இந்தப் பிரச்சினையைக் கண்டுபிடிக்க முடியும். பள்ளி செல்லத் தொடங்கும்போதே சக மாணவர்களுடம் பேசுகிறார்களா, சிரித்து விளையாடுகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். அப்படி சகஜமாக பழகவில்லை என்றால், மருத்துவமனைக்கு எல்லாம் செல்ல வேண்டியது இல்லை. முதலில் பேச்சு கொடுக்க வேண்டும். அனைவருமாய் விளையாட வேண்டும். இந்தப் பிரச்சினையை சுலபமாக குணப்படுத்தலாம்.
இளைஞர்கள் சிலர் இதுபோன்ற மனநிலையில் இருப்பர். அதற்குக் காரணம், சிறு வயதில் இருந்து அப்படியே பழகி இருப்பார்கள். தான் இருக்கும் இடம் அவர்களுக்கு பிடிக்காமல் இருந்தால், தனியாக இருப்பார்கள். இவ்வாறு யாருடனும் பேசாமல் இருந்தாலோ அல்லது அனைவரும் பங்கேற்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தால் பல்வேறு மன, உடல் நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அவை:
இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட என்னவெல்லாம் செய்யலாம்?
உங்களை நீங்களே நேசிப்பீர்: உங்களை நீங்களே நேசிக்கும்போதுதான் வேறு யாராலும் துன்பப்பட மாட்டீர்கள். உஙகள் மனம், உடலில் அதிகமாக அக்கறை காட்டுங்கள்.
மற்றவர்களிடம் பேசுவதே சிறந்த தீர்வு: ஆரோக்கியமான வார்த்தைகளை உங்கள் நம்பிக்கைக்கு உரிய நபர்களிடம் பேச முன்வர வேண்டும். இப்படிப் பேசுவதன் மூலம் உறவும் நன்றாக இருக்கும். மனதிற்கும் அமைதி கிடைக்கும்.
வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக அமைத்தல்: மன அழுத்தத்தால் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்தால், அதை விட்டுவிட்டு ஆரோக்கியமான உணவு,
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறவேண்டும்.
திட்டமிடல்: தேவை இல்லாததை யோசிக்க மூளைக்கு இடம் கொடுக்காமல், பயனுள்ள செயல்கள் செய்வதை திட்டமிட்டு உங்களை ஈடுபடுத்துங்கள்.
பிடித்ததைச் செய்யுங்கள்: உங்களுக்குப் படம் வரைய பிடிக்கும் என்றால், படம் வரையுங்கள். நடனமாட பிடிக்கும் என்றால் நடனம் ஆடுங்கள். பிடித்ததை செய்யும்போது மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கி, தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால், நிச்சயம் எளிதில் சமூக ஆரோக்கியத்தைப் பெற்றிட முடியும்" என்றார் மனநல மருத்துவர் செல்வராஜ்.