Last Updated : 25 Feb, 2022 08:36 PM

 

Published : 25 Feb 2022 08:36 PM
Last Updated : 25 Feb 2022 08:36 PM

எலும்பு வலுவிழப்பு நோய் A to Z | பரிசோதனைகளும் தீர்வுகளும் - மருத்துவர் ஆலோசனை

ஐம்பது வயதைக் கடந்துவிட்டால்போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டு வலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று ஆங்கில மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு, இந்த நோய் அதிகப் பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்து போனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவு முறையைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால், இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது.

‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? - நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன. நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன.

இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக, இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’.

ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது, அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.

காரணங்கள்

எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இரு பாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால், இவர்களுக்கு எலும்பு பலவீனம் அடைந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்துப் புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலவற்றால் இந்த நோய் வருகிறது.

பரம்பரை ரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவை சிகிச்சை போன்றவற்றின் காரணமாகத் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்குக் கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.

இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் பலவீனமாக இருக்கும் என்பதால், இவர்களுக்கு முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீதச் செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.

என்னென்ன தொல்லைகள்?

பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான், இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனித்தன்மை. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும்.

என்னென்ன பரிசோதனைகள்?

1. எலும்பு எக்ஸ்-ரே

# முன்பெல்லாம் இடுப்பு மற்றும் முதுகு எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து, இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது.

# பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால் அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது.

# எனவே, இப்போது இந்தப் பரிசோதனையைப் பல மருத்துவர்கள் முதல் நிலைப் பரிசோதனையாக வைத்துக்கொள்வதில்லை.

2.‘டெக்சா ஸ்கேன்’

# எலும்பு வலுவிழப்பு நோயைத் துல்லியமாகக் கண்டறிய ‘டெக்சா ஸ்கேன்’ (Dua# X-ray absorptiometry Scan - Dexa Scan) எனும் பரிசோதனை இப்போது வந்துள்ளது. இது எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது.

# நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

# இது எலும்பின் அடர்த்தியை அதாவது திண்ம அளவை - (Bone Minera# Density BMD) அளக்கும் பரிசோதனை.

# இதுவும் இடுப்பு மற்றும் முதுகு எலும்புகளுக்குள் எக்ஸ்ரே கதிர்களைச் செலுத்தி எடுக்கப்படும் பரிசோதனைதான். ஆனால், இதன் கதிர்வீச்சு அளவு மிகவும் குறைவு என்பதால், இதை அடிக்கடி எடுத்தாலும் பக்க விளைவு ஏற்படுவதில்லை. 10 நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும். வலி எதுவுமில்லாமல் இருப்பது, இதன் கூடுதல் பலன்.

# எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவை இது சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள்.

# இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால், அது இயல்பு அளவு.

# பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது.

# இந்த அளவு மைனஸ் 2 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால், அது எலும்புத் திண்மக் குறைவு நோயை (Osteopenia) குறிக்கும்.

# மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால், அது எலும்பு வலுவிழப்பு நோயை (Osteoporosis) குறிக்கும்.

இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு, சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால், அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் - டி அளவுகளைத் தெரிந்துகொண்டும், இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம்.

டெக்சா ஸ்கேனை எத்தனை முறை செய்ய வேண்டும்?

# 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்ள வேண்டும்.

# எலும்புத் திண்மக் குறைவு நோயுள்ளவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்துகொள்ள வேண்டும்.

# எலும்பு வலுவிழப்பு நோய்க்குச் சிகிச்சை பெற்றுவருபவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை செய்துகொள்ள வேண்டும்.

உங்கள் எலும்பு எப்படி இருக்கிறது?

உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் ‘எலும்பு வலுவிழப்பு’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காகச் சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிட அனுமானச் சோதனை’ (One minute osteoporosis risk test) என்று பெயர்.

கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள்:

# உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாகத் தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா?

# லேசாகத் தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும், உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா?

# உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா?

# உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா?

# அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா?

# அதிகமாகப் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா?

# மிகைத் தைராய்டு பிரச்சினை உள்ளதா?

# ருமட்டாய்டு எலும்பு மூட்டு வலி உள்ளதா?

# ஸ்டீராய்டு மாத்திரைகள், வலிப்பு மாத்திரைகள், கர்ப்பத் தடை மாத்திரைகளை நீண்ட காலம் பயன்படுத்துகிறீர்களா?

இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

- `நலம் வாழ` பகுதியிலிருந்து.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x