Published : 25 Feb 2022 04:56 PM
Last Updated : 25 Feb 2022 04:56 PM

பாஜக 3-வது பெரிய கட்சி என்று கூறுவதைவிட மலிவான அரசியல் வேறு எதுவும் இருக்க முடியாது: கே.எஸ்.அழகிரி

சென்னை: பாஜக தனித்துப் போட்டியிட்டுப் பெற்ற படுதோல்வியை மூடிமறைக்க வாக்கு சதவீத புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதைவிட மலிவான அரசியல் வேறு எதுவும் இருக்க முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: "கடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பங்கேற்கும் ஜனநாயக அமைப்புகளான ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பெற்ற வெற்றியைவிட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தமிழக வாக்காளர்கள் வழங்கியிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் மிக அமைதியாக நடந்து முடிந்த இத்தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுகவினரும் பாஜகவினரும் தேர்தல் முடிவுகளை ஏற்காமல் ஜனநாயகத்திற்கு விரோதமாக அவதூறு கருத்துகளைக் கூறிவருகிறார்கள். தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாத, காழ்ப்புணர்ச்சி கொண்ட இவர்களிடம் ஜனநாயக உணர்வை எதிர்பார்க்க முடியாது.

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சி பாஜகதான் என்று அண்ணாமலை கூறிய கருத்துக்கு ஆணித்தரமான புள்ளி விவரங்களோடு தெளிவாகப் பதில் கூறியிருந்தோம். தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவதைப்போல் நடிப்பவரை எழுப்ப முடியாது. தற்போது, தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிட்டு. காங்கிரஸ் கட்சியைவிட அதிக வாக்குகளைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக விளங்குகிறது என்று புதிய வியாக்கியானம் பேசப்படுகிறது. இந்த வாதம் எந்த அடிப்படையில் கூறப்படுகிறது என்று தெரியவில்லை.

ஆனால், தமிழக பாஜக மொத்தம் உள்ள 12,838 வார்டுகளில் 5,594 வார்டுகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்த முடிந்தது. மற்ற தொகுதிகளில் நிதியுதவி வழங்கி வேட்பாளர்களை நிறுத்த வலிய வலிய, கூவிக்கூவி அழைத்தும் எவரும் பாஜக சார்பாக போட்டியிட முன்வரவில்லை. ஆனால், போட்டியிட்ட இடங்களில் மொத்தம் பதிவான வாக்குகளில் 5.41 சதவீதம் மட்டுமே பெற்றிருக்கிறது. இதன்படி பார்த்தால் கூட, காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 12,838 வார்டுகளில், கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 1,370 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டு 3.31 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆனால், கூட்டணி ஒதுக்கீட்டின்படி குறைவான எண்ணிக்கையில் போட்டியிடுகிற போது வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் கட்சியின் பலத்தை முடிவுசெய்ய முடியாது.

ஆனால், மொத்தம் பதிவான வாக்குகளில் திமுக தலைமையிலான கூட்டணி 49.99 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி மொத்தம் 592 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் பாஜக 5,594 வார்டுகளில் போட்டியிட்டு 308 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே 200 வார்டுகளைப் பெற்று இருக்கிறது. அதைத்தவிர்த்து தமிழகம் முழுவதும் பெற்ற வார்டுகள் 108 தான்.

எனவே, காங்கிரஸ் கட்சி குறைவான இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 16 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டு 13 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது. மாறாக, பாஜக 198 வார்டுகளில் போட்டியிட்டு ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 178 வார்டுகளில் பாஜக டெபாசிட் தொகையைப் பறிகொடுத்திருக்கிறது.

தமிழக மக்களால் வெறுக்கப்படுகிற, புறக்கணிக்கப்பட்டு வருகிற தமிழக பாஜக தனித்துப் போட்டியிட்டுப் பெற்ற படுதோல்வியை மூடிமறைக்க வாக்கு சதவீத புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதைவிட மலிவான அரசியல் வேறு எதுவும் இருக்க முடியாது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற படுதோல்விக்குப் பிறகு இனி எந்தக் காலத்திலும் பாஜக தனித்து நிற்பதற்குக் கனவில் கூட நினைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் தமிழக தேர்தல் களத்தில் மகத்தான வெற்றிகளைப் பெற்று வரலாறு படைத்து வருகிற காங்கிரஸ் கட்சியோடு தங்களை ஒப்பிட்டுப் பேசுவதை பாஜக இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது.

மேலும், ஆக்கப்பூர்வமான வழிகளைப் பின்பற்றி கட்சியை வளர்க்க வேண்டுமேயொழிய குறுக்கு வழிகளைக் கையாள வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x