Published : 16 Apr 2024 06:12 AM
Last Updated : 16 Apr 2024 06:12 AM

ரூ.200 கோடியை தானம் செய்து துறவியான தொழிலதிபர்

பிரதிநிதித்துவப் படம்

சூரத்: குஜராத்தை சேர்ந்த வசதியான ஜெயின் தம்பதியர் தங்களின் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி துறவறத்தை ஏற்றுக்கொண்டனர், தற்போது முக்திக்கான பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் ஹிம்மத்நகரை சேர்ந்த தொழிலதிபர் பாவேஷ் பண்டாரி. கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரும் இவரது மனைவியும் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற விழாவில், தங்களுக்கு சொந்தமான ரூ.200 கோடிமதிப்பிலான அனைத்து சொத்துகளையும் தானமாக வழங்கி துறவறத்தை ஏற்றுக் கொண்டனர்..

கடந்த 2022-ம் ஆண்டு இவர்களின் 19 வயது மகளும் 16 வயதுமகனும் துறவறத்தை ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தங்கள் குழந்தைகளை பின்பற்றி பாவேஷ் பண்டாரியும் அவரது மனைவியும் துறவறம் பூண்டதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தம்பதியர் தற்போது முக்திக்கான பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர். வரும் 22-ம் தேதி நடைபெறும் விழாவில் உறுதிமொழி எடுத்த பிறகு, தம்பதியினர் அனைத்து குடும்ப உறவுகளையும் துறக்க உள்ளனர். பிறகு அவர்கள் நாடு முழுவதும் வெறுங்காலுடன் நடந்து சென்று, யாசகம் பெற்று மட்டுமே உயிர் வாழ்வார்கள்.

இரண்டு வெள்ளை ஆடைகள்,உணவு யாசகம் பெறுவதற்கு ஒருகிண்ணம், ஜைன துறவிகள் உட்காரும் முன் பூச்சிகளை தள்ளிவிடுவதற்காக வைத்திருக்கும் ரஜோஹரன் எனப்படும் வெள்ளை துடைப்பம் ஆகியவற்றை மட்டுமேஇவர்கள் வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அபரிமிதமான செல்வத்திற்கு பெயர் பெற்ற பண்டாரி குடும்பத்தின் இந்த முடிவு குஜராத் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கு முன் பல கோடி ரூபாய்சொத்துகளை துறந்து சமண துறவியாக மாறிய பவாராலால் ஜெயின் போன்ற சிலரது வரிசையில் இத்தம்பதியரும் இணைந்துள்ளனர். இந்தியாவில் நுண்ணீர் பாசன முறைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் பவாராலால் ஜெயின் ஆவார்.

குஜராத்தில் கடந்த ஆண்டு வைர வியாபாரி ஒருவரும் அவரது மனைவியும் துறவறம் பூண்டனர். தங்களின் 12 வயது மகன் துறவறம்பூண்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர்இவர்களும் அதே பயணத்தைதொடங்கினர். ம.பி.யில் கடந்த 2017-ல் ஒரு பணக்கார தம்பதியர் தங்களின் 3 வயது மகள் மற்றும் ரூ.100 கோடி சொத்துகளை துறந்து, துறவறம் பூண்டது தலைப்புச் செய்தியானது.

சுமித் ரத்தோர் (35), அனாமிகா (34) ஆகிய இருவரும் தங்கள் மகளை அவளின் தாத்தா-பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு, துறவறவாழ்க்கையை தொடங்கினர்.

இவர்கள் துறவு வாழ்க்கையை தொடங்குவதற்கு முதல்நாள் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலையிட்டது. இவர்களின் குழந்தையின் எதிர்கால பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்துஅறிக்கை அளிக்குமாறு சிவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையைகேட்டுக்கொண்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x