Published : 16 Apr 2024 05:58 AM
Last Updated : 16 Apr 2024 05:58 AM

பாகிஸ்தான் சிறையில் 11 ஆண்டுக்கு முன்பு இந்தியரை அடித்துக் கொன்றவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

அமிர் சர்பராஸ் மற்றும் சரப்ஜித் சிங்

புதுடெல்லி: பாகிஸ்தான் சிறையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியரை அடித்துக் கொன்றவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் டார்ன் டரன் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பிகிவின்ட் நகரைச் சேர்ந்தவர் சரப்ஜித் சிங். விவசாயியான இவரை எல்லை தாண்டிச் சென்றதாகக் கூறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த 1990-ம் ஆண்டு கைது செய்தது. லாகூர் மற்றும் பைசலாபாத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமாக அமைந்த குண்டுவெடிப்பில் சரப்ஜித் சிங்குக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம், சரப்ஜித் சிங் குற்றவாளி என 1991-ம் ஆண்டு அறிவித்ததுடன் மரண தண்டனை விதித்தது. இவர் பலமுறை கருணை மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, 2012ஆண்டு அந்நாட்டின் அப்போதைய அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, சரப்ஜித் சிங்கின் மரண தண்டனையை ஆயுளாக குறைத்தார்.

இதனிடையே கடந்த 2013-ம் ஆண்டு லாகூரின் கோட் லக்பத் சிறையில் இருந்த சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் உளவு அமைப்புடன் (ஐஎஸ்ஐ) தொடர்புடைய அமிர் சர்பராஸ் மற்றும் முடாசார் ஆகிய இருவரும் கடுமையாக தாக்கி உள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி 8 நாட்களில் அவர் உயிரிழந்தார்.

சர்பராஸ் மற்றும் முடாசார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2018-ம்ஆண்டு இவர்கள் மீதான குற்றச் சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி விடுதலை செய்தது.

லஷ்கர் தீவிரவாதி: இதையடுத்து, லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர் ஹபிஸ் சயீதின் உதவி யாளரான சர்பராஸ் லாகூரின் இஸ்லாம்புரா பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சர்பராசை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாகிஸ்தான் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x