Published : 17 Oct 2023 03:04 PM
Last Updated : 17 Oct 2023 03:04 PM

சென்னை ரயில் நிலையங்களில் மாணவர் மோதல்: விடலை வயதில் விபரீத மனநிலை

சென்னை: சென்னையில் ரயில் பயணத்தின்போதும், ரயில் நிலையங்களிலும் கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி ஏற்படும் மோதலால், பயணிகள் நிம்மதியான பயணத்தை இழந்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் மக்களின் தினசரி போக்குவரத்தில் உயிர்நாடியாக இருப்பது புறநகர் மின்சார ரயில் சேவையாகும். இதில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விக்காக தினமும் சென்னைக்கு வந்து செல்கின்றனர். ரயில் பயணத்தின்போது, இந்த மாணவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் என வெவ்வேறு ரூட் மாணவகுழுக்களை உருவாக்கி கொள்கின்றனர். இவர்களுக்குள் கல்லூரி மாணவர்கள் என்ற ஒற்றுமை இருந்தாலும் வேறு கல்லூரி, வேறு பகுதி என்ற வேற்றுமை உணர்வு மனதில் தொற்றிக்கொண்டு வெறுப்புணர்வை வளர்கிறது.

ஒரு கட்டத்தில் இந்த மாணவர்கள் இடையே வெறுப்பு உணர்வு அதிகரித்து மோதல் போக்கு ஏற்படுகிறது. தற்போது அரிவாள், கத்தி என ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கடற்கரை ரயில் நிலையம், பெரம்பூர் லோகோ நிலையம் ஆகிய இடங்களில் கல்லூரி மாணவர்கள் இடையே இருவேறு மோதல் சம்பவம் நடைபெற்றது. இதில் 2 பேர் காயமடைந்தனர். 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மாணவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும்போது, ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசுவது, அரிவாள்,கத்தியை வைத்து தாக்கிக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களின் மோதலுக்கு மத்தியில் சாதாரண பயணிகள் மாட்டிக்கொண்டு அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து பொன்னேரியைச் சேர்ந்த ரயில் பயணி பிரதாப் கூறியதாவது: ரயில் நிலையங்களில் மாணவர்கள் இடையே அடிக்கடி மோதலால், அவதிக்குள்ளாகிறோம். மோதலின்போது, மாணவர்கள் ரயில்வே சொத்துகளை சேதப்படுத்துகின்றனர். கற்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கும்போது, ரயில் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலையே உள்ளது. மாணவர்கள் மோதல் நடந்த பிறகு, 2 நாட்களுக்கு மட்டும் ஆர்.பி.எஃப் போலீஸார் கண்காணிப்பு பணியில் இருப்பார்கள்.

ரயிலில் ரோந்து செல்வார்கள். அதன்பிறகு, ஆர்.பி.எஃப் போலீஸார் காணாமல் போய்விடுவார்கள். புறநகர் ரயில் நிலையங்களில் ஆர்.பி.எஃப் போலீஸார் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். காலை, மாலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் ஆர்.பி.எஃப் போலீஸார் ரோந்து செல்ல வேண்டும். இதன்மூலம், மாணவர்கள் மோதலை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தமிழக முற்போக்கு நுகர்வோர் மையத் தலைவர் டி.சடகோபன் கூறியதாவது: என்ன காரணங்களுக்காக, மாணவர்கள் மோதிக் கொள்கிறார்கள் என தெரியவில்லை. குறிப்பாக, பிரபலமான 2 கல்லூரிகளின் மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலின்போது, பயணிகள் சிக்கி மிகுந்து துன்பத்தை சந்திக்கின்றனர். இதற்கு காவல்துறையின் துணையுடன் ரயில்வே நிர்வாகம் தீர்வு காண வேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் காவல்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து விழிப்புணர்வு நடத்த வேண்டும். குற்றங்களை தடுக்க அனைத்து ரயில்நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

2 ஆண்டில் 36 பேர் கைது: சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் ரயில் பயணத்தின்போதும், ரயில் நிலையங்களிலும் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு சொத்தை சேதப்படுத்தல், கொலை முயற்சி, பொதுமக்களுக்கு இடையூறு போன்ற பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கவுன்சலிங் அவசியம் என்று ரயில்வே போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு) பொன்ராமு கூறியதாவது: மோதலில் ஈடுபடும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். இந்த மாணவர்களின் பெற்றோர் சாதாரண கூலி தொழிலாளி, விவசாயிகள் ஆவர். மேலும், இந்த மாணவர்கள் இடையே மோதலுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. எந்த முன்விரோதமும் இல்லை. முகம், பெயர் தெரியாமல் மோதிக்கொள்கின்றனர். எங்கள் கல்லூரி மாணவரை அடித்துவிட்டார் என்ற காரணத்துக்காக மோதிக்கொள்வது வேடிக்கை. இது அவர்களின் மோசமான மனநிலையை காட்டுகிறது.

மாணவர்கள் மோதல் சம்பவம் பெரும்பாலும் கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தட நிலையங்கள்,சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல்- திருவள்ளூர் வழித்தட ரயில் நிலையங்களில் நடைபெறுகின்றன. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் சிறிய கிராமத்தைச்சேர்ந்த மாணவர்கள் இந்த மோதலில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழித்தடத்தில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்களில் வந்துசெல்லும் கல்லூரி மாணவர்கள் இந்த மோதலில் ஈடுபடுவது கிடையாது. மாணவர்கள் மீது வழக்குப் பதிவதால், அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் விதத்தில் ரயில்வே போலீஸார் விழிப்புணர்வு பணியில் ஈடுபடுகின்றனர்.

பிரதாப்

இந்த மாணவர்கள் வசிக்கும் கிராமத்துக்கு சென்று, அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள், கிராமத் தலைவர், கல்லூரி முதல்வர்கள், போலீஸார் இணைந்து மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்தால், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். மேலும், மாணவர்கள் உணர்ந்து திருந்தினால் மட்டுமே இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

டி.சடகோபன்

இதுகுறித்து அரசு கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: நெடுங்காலமாக கல்லூரி வகுப்புக்கு வராமல் இருக்கும் மாணவர்கள்தான் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இத்தகை சம்பவங்களை தடுப்பதற்கு பிரச்சினைக்குரிய அரசு கல்லூரிகளிலும் மாதந்தோறும் ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, முக்கிய பிரமுகர்கள், மனநல ஆலோசகர்கள், காவல்துறை உயரதிகாரிகள் மூலமாக மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

பொன்ராமு

அதையும் மீறி குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் கல்லூரிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவார்கள். குற்றங்கள் தொடர்ந்தால், அவர்கள் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். இந்த மோதல் சம்பவம் கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதில்லை. மிக நெடுந்தொலைவில் இருந்து சென்னைக்கு வரும் கல்லூரி மாணவர்களை அருகில் உள்ள அரசு கல்லூரியில் சேர தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x