Published : 11 Oct 2023 03:46 PM
Last Updated : 11 Oct 2023 03:46 PM

இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் பரத நாட்டிய கலைஞர் முருகசங்கரி

மதுரை: பரதநாட்டியக் கலையை அனைவருக்குமான கலையாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார் மதுரையைச் சேர்ந்த நடனக் கலைஞர்.

மதுரை அண்ணாநகரில் வசிப்பவர் பரதநாட்டியக் கலைஞர் முருகசங்கரி (40). சென்னை ராயப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை லியோ பிரபு, தாயார் உஷா ஆகியோர் பாரம்பரிய நாடகக் கலை, இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கலைமாமணி விருதுபெற்ற லியோ பிரபு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனது 6 வயதிலிருந்தே பரதநாட்டியம் கற்றுக்கொள்ள தொடங்கிய முருகசங்கரி, பி.டெக். கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளார். சிறிது காலம் பொறியாளராக பணிபுரிந்தவர், அதிலிருந்து விலகி முழுவதும் நாட்டியக் கலைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

தான் கற்ற கலையை அடுத்த தலைமுறையினருக்கு பயிற்றுவிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் இலவசமாக பரதநாட்டியத்தை கற்றுக் கொடுக்கிறார். இது தொடர்பாக முருகசங்கரி கூறியதாவது: எனது பணியை பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகளை வழங்கியுள்ளன. குறிப்பாக தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றம் சிறந்த நடன மணிக்கான விருதை வழங்கி யுள் ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் ‘குறவஞ்சி நாட் டிய நாடகங்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தி முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.

திருமணமான பின்பு மதுரை அண்ணாநகருக்கு 2016-ல் குடிபெயர்ந்தேன். புகைப்படக் கலைஞரான எனது கணவர் ஏ.விவேக்குமார், மகன் அமுதன் லியோ ஆகியோர் நான் நடன கலையை தொடர்ந்து மேற்கொள்ள ஊக்குவித்து வருகின்றனர். 2011-ல் சென்னையிலிருந்தபோது கலைக்கூடம் என்ற பெயரில் பரதநாட்டியப் பள்ளியை நடத்தி வந்தேன். மதுரைக்கு வந்த பின்பு, இங்கு கலைக்கூடத்தை தொடங்கி பலருக்கும் கற்றுத் தருகிறேன்.

முதலில் இலவசமாக கற்றுத் தரலாம் என நினைத்தேன். ஆனால், இலவசமாக கற்றுத் தந்தால் மதிப்பிருக்காது என்பதால் குறைந்த கட்டணம் பெறுகிறேன். பரதநாட்டியக் கலையை அனைவருக்குமான கலையாக கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறேன். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் இலவசமாக நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

பரதநாட்டியக் கலையை விரும்பும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் எங்களை தொடர்பு கொண்டால் இலவசமாக நடன நிகழ்ச்சியை நடத்த தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x