Published : 11 Oct 2023 01:43 PM
Last Updated : 11 Oct 2023 01:43 PM

''பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை'' - முக்கொம்பு சம்பவம் குறித்த கவன ஈர்ப்புக்கு முதல்வர் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில், குறிப்பாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்" என்று முக்கொம்பு சம்பவம் குறித்த கவன ஈர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

தமிழக சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வினாக்கள் விடைகள் நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். பின்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம், முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் பெண் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பதிலளித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது: "கடந்த 04.10.2023 அன்று மாலை சுமார் 4-00 மணியளவில், திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய சரகம், முக்கொம்பு சுற்றுலாத் தலத்துக்கு ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து பணியில் பணிபுரிந்து வரும் சங்கர் ராஜபாண்டியன் ஆகியோர் அனுமதியோ, விடுப்போ பெறாமலும், உயரதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமலும், ஜீயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து, பல நாட்களாகப் பணிக்கு வராமல் இருந்த காவலர் சித்தார்த்தன் என்பவருடன் இணைந்து சென்றுள்ளனர்.

சுற்றுலாத் தலத்துக்கு வருகை தந்திருந்த இளைஞர் மற்றும் 17 வயது பெண்ணை மிரட்டி, அந்த இளைஞரைத் தாக்கி விரட்டி அனுப்பிவிட்டு, உடனிருந்த பெண்ணை அந்தக் காவலர்கள் தாங்கள் வந்திருந்த தனியார் காரில் ஏற்றி, அவரிடம் தவறான முறையில் நடந்திருக்கிறார்கள். பின்னர், அந்தப் பெண் சத்தம் போட்டதால், அவரைக் காரிலிருந்து இறக்கிவிட்டிருக்கிறார்கள்.

இதனையடுத்து அந்தப் பெண் மற்றும் அவருடன் வந்த இளைஞர் இருவரும் முக்கொம்பு புறக்காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்ததின் பேரில், அங்கு பணியிலிருந்த காவல் துறையினர் உடனடியாக அவ்விடத்துக்குச் சென்று, அந்தக் காவலர்களை விசாரித்தபோது, அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை.

இங்கே எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறபோது, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொன்னார். அது உண்மையல்ல. அந்தக் காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன், அந்தக் காவல் நிலைய உதவி ஆய்வாளர், உடனடியாக எஸ்பியைத் தொடர்பு கொண்டு, அவருடைய கவனத்துக்கு எடுத்துச் சென்று, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. உடனடியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் அன்றே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.மேலும், குற்றம் இழைத்த காவலர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கக்கூடிய பிரிவுகளின் கீழ், துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இதில் விசாரணை முடிக்கப்பட்டு, இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில், குறிப்பாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்." இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x