Published : 27 Sep 2023 04:04 AM
Last Updated : 27 Sep 2023 04:04 AM

திங்கள்நகர் சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டியை மீட்டு உணவு வழங்கிய பெண் காவலருக்கு பாராட்டு

திங்கள்நகரில் பசியால் சாலையோரம் மயங்கிவிழும் நிலையில் இருந்த மூதாட்டியை மீட்டு உணவு வழங்கிய பெண் காவலர் தங்கபாய்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரில் போக்குவரத்து மிக்க சாலையில் பசியால் மயங்கி விழுந்த மூதாட்டியை அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் காவலர் மீட்டு உணவு வழங்கினார்.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பெண் காவலருக்கு பாராட்டு குவிகிறது. திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோவில் அருகே குளச்சல் போக்குவரத்து பெண் காவலர் தங்கபாய் நேற்று காலை போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பசியால் தலைசுற்றி சாலையோரம் மயங்கி விழும் நிலையில் தள்ளாடியபடி நின்றார். அவரை காவலர் தங்கபாய் சென்று கீழே விழாதவாறு தாங்கிப் பிடித்தார்.

பின்னர் அவரை அங்கிருந்து மீட்டு அருகில் உள்ள கடை ஓரம் உட்கார வைத்தார். அவரிடம் விசாரித்த போது, அந்த மூதாட்டி நெய்யூர் அருகே ஊற்றுக்குழியை சேர்ந்தவர் என்பதும், பிள்ளைகள் கண்டுகொள்ளாததால் அவர் வீதியில் சுற்றி திரிவதும் தெரியவந்தது. காலையில் உணவு உண்ணாமல் வந்ததால் தலைசுற்று ஏற்பட்டு மயங்கும் நிலைக்கு அவர் சென்றிருந்தார். அருகே இருந்த ஓட்டலில் இருந்து அவருக்கு தங்க பாய் காலை உணவும், டீயும் வாங்கி கொடுத்தார்.

இதையடுத்து இயல்பு நிலைக்கு திரும்பிய மூதாட்டி கண்களில் நீர்தும்ப பெண் காவலரை நன்றியுடன் பார்த்துாறு அங்கிருந்து சென்றார். போக்குவரத்தை சீரமைக்கும் பரபரப்பான பணிக்கு மத்தியில் மூதாட்டிக்கு உதவி செய்த பெண் காவலரின் மனிதாபிமான செயல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து ஏராளமானோர் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இது பற்றி அறிந்த குளச்சல் டிஎஸ்பி தங்கராமனும் பெண் காவலர் தங்க பாய்க்கு பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x