

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் புனித நகரான மதுராவில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் உள்ளது. இந்துக்களின் புராதனக் கோயிலான இதை, முகலாயர் மன்னர் அவுரங்கசீப் இடித்ததாகப் புகார் உள்ளது.
எனவே, ஈத்கா மசூதியை இடித்துவிட்டு கோயிலை விரிவுபடுத்த வேண்டும் என்று உ.பி.யின் பல நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெறுகின்றன. இந்தச் சூழலில், ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு முஸ்லிம் என்று உ.பி.யின் பிரபல மவுலானா ஜர்ஜிஸ் அன்சாரி சர்ச்சைக்குரிய வகையில் கூறியுள்ளார்.
இதுகுறித்து மவுலானா அன்சாரி பகவத் கீதையின் ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டி கூறுகையில், “இந்த ஸ்லோகம் பக்தர்கள் தங்கள் முழு உடலையும் பயன்படுத்தி வழிபாடு செய்யுமாறு அறிவுறுத்துகிறது. எனவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மதத்தால் ஒரு முஸ்லிம். கிருஷ்ணர் ஒரு நாளைக்கு 5 முறை தொழுகை நடத்தியவர். இந்துக்கள் தங்கள் மத நூல்களைக் கூர்ந்து படித்தால், அவர்கள் இஸ்லாத்தை மதிக்கத் தொடங்குவார்கள். இஸ்லாம் ஒரு உலகளாவிய மதம் என்று இந்து மத நூல்கள் கூறுகின்றன. பகவான் ராமர் மற்றும் கிருஷ்ணர் தொடர்பான நூல்களிலும் இதுவே குறிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இவரது கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், “பகவத் கீதையின் 6-வது அத்தியாயத்தின் 10-வது ஸ்லோகத்தை ஜர்ஜிஸ் அன்சாரி தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றை முழுமையாகப் பரம்பொருளிடம் அர்ப்பணிப்பதே ஒரு யோகியின் கடமை என்பதுதான் இந்த ஸ்லோகத்தின் உண்மையான பொருள். தவிர, இந்த ஸ்லோகத்தில் ‘நமாஸ்’ அல்லது ‘இஸ்லாம்’ பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை” என்று சமூக வலைதளங்களில் விளக்கம் அளித்துள்ளனர்.
இதற்கிடையில், மவுலானா ஜர்ஜிஸ் கருத்துக்கு மதுராவின் பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவரை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக, இந்துத்துவத் தலைவர் ஷிஷிர் சதுர்வேதி அளித்த புகாரின் அடிப்படையில், லக்னோவில் உள்ள ஹஸ்ரத் கஞ்ச் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்சாரியின் பேச்சு குறித்து விசாரணை நடத்திய பிறகு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு “ஒரு முஸ்லிம் பெண் பிரசவ வேதனையில் இருந்தாலும் கூட, தனது கணவரின் பாலியல் விருப்பங்களை நிறைவேற்றத் தயாராக இருக்க வேண்டும்” என்று அன்சாரி கூறி கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.