

புதுடெல்லி: ஹரியானாவின் ஜிந்த் நகர் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பஞ்சாபின் ஜலந்தரில் நடைபெற்ற விழாவில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட சென்னை பூங்கா, சின்ன சேலம், குன்னூர் உள்ளிட்ட 75 ரயில் நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஹரியானாவின் ஜிந்த் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை தயாரித்ததன் மூலம் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டித் தொழிற்சாலை, தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த ரயில் ஜிந்த்- சோனிபட் நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது.
பின்னர், ஹிந்த் நகரின் ஏகலைவா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.14,700 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிற்பகலில் சண்டிகரில் நடைபெற்ற விழாவில் ரூ.6,600 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் பஞ்சாபின் ஜலந்தர் நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி ரூ.5,470 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட சென்னை பூங்கா, சின்ன சேலம், குன்னூர் உட்பட 75 ரயில் நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜலந்தரில் நடைபெற்ற விழாவில் ஆம் ஆத்மியை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்கவில்லை.
ஹரியானா, பஞ்சாபில் நேற்று ஒரே நாளில் ரூ.26,800 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டன. இந்த நலத்திட்ட விழாக்களில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவுக்கு கிடைத்திருக்கிறது. இந்த ரயில் முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டிருப்பது மிகுந்த பெருமிதம் அளிக்கிறது. இதன்மூலம் இந்தியாவின் தொழில்நுட்ப திறன் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச அளவில் 4 நாடுகளிடம் மட்டுமே ஹைட்ரஜன் எரிசக்தி தொழில்நுட்பம் இருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது.
மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 12 ஆண்டுகளில் ரயில்வே துறையை மின்மயமாக்கும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது 99 சதவீத ரயில்கள் மின்சாரத்தில் இயக்கப்படுகின்றன. நாடு முழுவதும் 1.75 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த மருத்துவ மையங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுகின்றனர். மருந்து உற்பத்தி மற்றும் மருத்துவ சுற்றுலாவின் தலைநகராக இந்தியா உருவெடுத்திருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரயில்வே துறை பின்தங்கிய நிலையில் இருந்தது. பாஜக ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ரூ.5 முதல் ரூ.25 வரையிலான கட்டணத்திலேயே பயணிக்கலாம்
ஜெர்மனியில் கடந்த 2018-ம் ஆண்டு உலகின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளும் அடுத்தடுத்து ஹைட்ரஜன் ரயில்களை அறிமுகம் செய்தன. 1976-ல் இந்தியாவில் ஹைட்ரஜன் எரிசக்தி தொடர்பான ஆய்வு தொடங்கியது.
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு ஹைட்ரஜன் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2023-24-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 35 ஹைட்ரஜன் ரயில்களை உள்நாட்டில் தயாரிக்க ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் ஆலையில் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கப்பட்டது. இந்த ரயில் 10 பெட்டிகளைக் கொண்டது.
இது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும். 2,600 பேர் வரை பயணம் செய்ய முடியும். ரயிலின் இன்ஜின் பெட்டியில் ஹைட்ரஜன் சிலிண்டர், மின்கலம், பேட்டரி, மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளன. சிலிண்டரில் 440 கிலோ ஹைட்ரஜன் எரிவாயு அடைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து மின் கலத்துக்குள் ஹைட்ரஜன் எரிவாயு செலுத்தப்படும். மின் கலத்தில் ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் இணைந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த மின்சாரம் பேட்டரியில் சேமித்து வைக்கப்படும்.
பேட்டரியில் இருந்து பெறப்படும் மின்சாரம் மூலம் மின்மோட்டார் இயங்கி, ரயில் ஓடும். இந்த ரயில் 3,200 குதிரைத் திறன் கொண்டது. ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் இடையே தினமும் 2 முறை இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. ஹைட்ரஜன் உற்பத்தி செலவு மிகவும் அதிகமாக உள்ளது. எனினும், ரயிலில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.25 ஆகவும் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.