Published : 04 Sep 2017 08:07 AM
Last Updated : 04 Sep 2017 08:07 AM

முன்னாள் அரசு அதிகாரிகள் உட்பட 9 பேர் புதுமுகங்கள் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: நிர்மலா சீதாராமன் - பாதுகாப்பு; பியூஷ் கோயல் - ரயில்வே அமைச்சராக பதவியேற்பு

மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பியூஷ் கோயல் ரயில்வே அமைச்சராகவும் பதவியேற்றனர். அமைச்சரவையில் இருந்து 6 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிதாக 9 பேர் சேர்க்கப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று அமைச்சரவையை மாற்றி அமைத்தார். இதில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த மார்ச்சில் கோவா முதல்வராகப் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பாதுகாப்புத் துறையை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றார்.

கடந்த 1975, 1980-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பாதுகாப்புத் துறையை தன்வசம் வைத்திருந்தார். அதன்பிறகு தற்போது பாதுகாப்புத் துறைக்கு முழுநேர பெண் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா, நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் அடங்கிய கேபினட் பாதுகாப்பு குழுவில் நிர்மலா சீதாராமனும் இணைந்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு

கப்பல் போக்குவரத்து இணை அமைச்சராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணனுக்கு நிதித் துறை இணை அமைச்சர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்தில் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

தொடர் ரயில் விபத்துகள் காரணமாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். அவர் தற்போது தொழில், வர்த்தக துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே அமைச்சராக பியூஷ் கோயல் பொறுப்பேற்றுள்ளார். சுரங்கத் துறை அமைச்சராகவும் அவரே நீடிக்கிறார்.

கடந்த 8 ஆண்டுகளில் 8 ரயில்வே அமைச்சர்கள் மாறியுள்ளனர். பிரதமர் மோடி ஆட்சியில் சதானந்த கவுடா, சுரேஷ் பிரபுவை தொடர்ந்து பியூஷ் கோயல் ரயில்வே பொறுப்பை ஏற்றுள்ளார்.

மத்திய நீர்வளத் துறை அமைச்சராக இருந்த உமா பாரதி அந்த துறையில் இருந்து மாற்றப்பட்டு குடிநீர், துப்புரவு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கூடுதலாக நீர்வளத் துறை, கங்கை புத்துயி ரூட்டல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திறன் மேம்பாட்டுத் துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

9 புதிய முகங்கள்

மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜீவ் பிரதாப் ரூடி, கல்ராஜ் மிஸ்ரா, பண்டாரு தத்தாத்ரேயா, சஞ்ஜீவ் குமார் பல்யான், பகன் சிங் குலஸ்தே, மகேந்திர நாத் பாண்டே ஆகிய 6 பேர் அண்மையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அமைச்சரவை விரிவாக்கத்தில் 9 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் முன்னாள் அரசு அதிகாரிகள் ஆவர்.

வெளியுறவுத் துறை முன்னாள் அதிகாரியான ஹர்தீப் புரி- வீட்டு வசதி, கேரள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அல்போன்ஸ் கண்ணன்தானம் -சுற்றுலா, மத்திய உள்துறை முன்னாள் செயலாளர் ராஜ்குமார் சிங்- மின் துறை, மும்பை போலீஸ் முன்னாள் கமிஷனர் சத்யபால் சிங் -மனித வள மேம்பாடு ஆகியோர் அந்தந்த துறை இணை அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

பாஜக மூத்த தலைவர்கள் அஸ்வினி குமார் சவுபே (பிஹார்)- சுகாதாரம், வீரேந்திர குமார் (மத்திய பிரதேசம்)- மகளிர்-குழந்தைகள் நலன், சிவபிரதாப் சுக்லா (உத்தரபிரதேசம்)- நிதித்துறை, அனந்த்குமார் ஹெக்டே (கர்நாடகா)-திறன் மேம்பாடு, கஜேந்திர சிங் ஷெகாவத் (ராஜஸ்தான்)- வேளாண் துறை இணையமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த அனில் தவே கடந்த மே மாதம் காலமானார். அவரது துறை கேபினட் அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த வெங்கய்ய நாயுடு குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அந்தத் துறை ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

புதிய விளையாட்டுத் துறை அமைச்சராக ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பொறுப்பேற்றுள்ளார். அத்துறை இணையமைச்சராக இருந்த விஜய் கோயலுக்கு நாடாளுமன்ற விவகாரம், புள்ளியியல்-திட்ட அமலாக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய அமைச்சர்கள் பிரதமருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

மத்திய அமைச்சரவையில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 73 அமைச்சர்கள் இருந்தனர். அமைச்சரவை விரிவாக்கத்தில் இந்த எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x