Published : 03 May 2023 09:11 AM
Last Updated : 03 May 2023 09:11 AM
காந்திநகர்: ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் இடைக்கால தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி விமர்சித்து பேசினார். ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி என பெயர் இருப்பது எப்படி?’’ என கூறினார். இது குறித்து குஜராத் பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் தகுதி இழப்பு செய்யப்பட்டார். சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிக்க கோரி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ராகுல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்த வழக்கு மிகவும் அவசரமான வழக்கு என்றும், சூரத் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இருதரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதி ஹேமந்த், இந்தநிலையில் இடைக்கால தடைவிதிக்க முடியாது என்றும், ஆவணங்களையும், நடைமுறைகளையும் ஆராய்ந்த பின் இறுதி தீர்ப்பை வழங்குவதாகவும் கூறினார். கோடை விடுமுறை மே 8-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றம் மீண்டும் திறந்தபின் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என அறிவித்தார்.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மற்றொரு பின்னடைவாக கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT