Published : 24 Apr 2023 04:09 AM
Last Updated : 24 Apr 2023 04:09 AM

37 நாட்கள் தலைமறைவாக இருந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாபில் கைது

பஞ்சாபின் ரோட் கிராமத்தில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் நேற்று கைது செய்யப்பட்டார். (உள்படம்) அம்ரித்பால் சிங்.படம்: பிடிஐ

சண்டிகர்: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாபில் கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் 37 நாட்கள் தலைமறைவாக இருந்த அவர், குருத்வாராவுக்கு உரையாற்ற வந்தபோது போலீஸ் பிடியில் சிக்கினார். அசாமின் திப்ருகர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

பஞ்சாபின் அமிர்தசரஸ் அடுத்த ஜல்லபூர் கெரா கிராமத்தை சேர்ந்தவர் அம்ரித்பால் சிங் (30). பள்ளிப் படிப்பை முடித்த அவர், துபாயில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.கடந்த ஆண்டில் பஞ்சாப் திரும்பிய அவர், ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவராக பதவியேற்றார். காலிஸ்தான் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் மதரீதியாக பிரச்சாரம் செய்து வந்தார். அதோடு ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்' என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

கடந்த பிப்ரவரியில் அவரது ஆதரவாளரை அமிர்தசரஸ் புறநகர் போலீஸார் கைது செய்தனர். அப்போது வாள், துப்பாக்கி ஏந்திய தொண்டர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அம்ரித்பால் தனது ஆதரவாளரை மீட்டுச் சென்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் தீவிர ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த 10 கம்பெனிகள் பஞ்சாபுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கடந்த மார்ச் 18-ல் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டம், மெகத்பூர் பகுதியில் காரில் சென்ற அம்ரித்பால் சிங்கை போலீஸார் சுற்றி வளைத்தனர். ஆனால் போலீஸ் வளையத்தில் இருந்து அவர் தப்பினார்.

இதைத் தொடர்ந்து, லூதியானா, பாட்டியாலா, குருஷேத்திரம், டெல்லி என பல்வேறு பகுதிகளில் அவர் சுற்றித் திரிந்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய நண்பர் பபால்பிரீத் சிங் உட்பட 9 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

அம்ரித்பால் சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மேலும் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இங்கிலாந்தை சேர்ந்த கிரண்தீப் கவுரை கடந்த பிப்.10-ம் தேதி அம்ரித்பால் சிங் திருமணம் செய்தார். கணவர் தலைமறைவான நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் செல்வதற்காக கடந்த 20-ம் தேதி அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு கிரண்தீப் கவுர் சென்றார். அவரை குடியேற்றத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர் விமானத்தில் ஏற தடை விதிக்கப்பட்டதால் ஜல்லபூர் கெராவில் உள்ள கணவரின் வீட்டுக்கு திரும்பினார். அவரிடம் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். நெருங்கிய நண்பர்களும் கைது செய்யப்பட்டதால், அம்ரித்பால் சிங் தலைமறைவாக இருப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

பிந்தரன்வாலே கிராமத்தில் கைது: இந்த சூழலில், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் பிந்தரன்வாலேவின் சொந்த கிராமமான ரோட் பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு அம்ரித்பால் சிங் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சாதாரண உடையில் ரோட் கிராமத்தை சுற்றிவளைத்தனர். நேற்று அதிகாலை குருத்வாராவில் அம்ரித்பால் சிங் ஆன்மிக உரையாற்றினார். குருத்வாராவுக்குள் சென்று கைது செய்ய விரும்பாத போலீஸார், குருத்வாரா நிர்வாகிகள் மூலம் அவரை வெளியே அழைத்து வந்தனர். காலை 6.45 மணிக்கு அம்ரித்பால் சிங்கை போலீஸார் கைது செய்தனர். கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் 37 நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் போலீஸ் பிடியில் சிக்கினார்.

அசாம் சிறையில் அடைப்பு: ரோட் கிராமத்தில் இருந்து பதின்டா விமான நிலையத்துக்கு அம்ரித்பால் சிங் அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து விமானம் மூலம் அசாம் கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்புமிக்க திப்ருகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நெருங்கிய நண்பர்களான பபால்பிரீத் சிங் உள்ளிட்ட 10 பேரும் அதே சிறையில்தான் உள்ளனர்.

பஞ்சாப் முதல்வர் கருத்து: பஞ்சாப் ஆம் ஆத்மி அரசின் முதல்வர் பகவந்த் மான் நேற்று கூறியபோது, ‘‘நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். வளமான பஞ்சாப் மண்ணில் வெறுப்புணர்வு விதைகள் விதைக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம். அமைதிக்கு ஊறு விளைவிக்கும் எந்த நடவடிக்கையையும் சகித்துக் கொள்ளமாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு: நடிகரும், சமூக ஆர்வலருமான தீப் சித்து, ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பை தொடங்கினார். அவர் கார் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, துபாயில் லாரி ஓட்டுநராக இருந்த அம்ரித்பால் சிங் திடீரென அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் துபாயில் இருந்து அவர் பஞ்சாப் திரும்பினார். காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் பிந்தரன்வாலே போலவே உடையணிந்து, அவரை போன்றே ஆன்மிக கூட்டங்களில் உரையாற்றி வந்தார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் அம்ரித்பால் சிங்குக்கு தொடர்பு இருந்தது. ஜார்ஜியா நாட்டில் இவரது ஆதரவாளர்களுக்கு ஐஎஸ்ஐ உளவாளிகள் ஆயுதப் பயிற்சி அளித்துள்ளனர். அம்ரித் பால் மற்றும் ஆதரவாளர்களுக்கு பல நாடுகளில் இருந்து ரூ.40 கோடி அளவுக்கு பணம் வந்துள்ளது. ஐஎஸ்ஐ தொடர்பு மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று பஞ்சாப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x