Published : 23 Apr 2023 06:40 PM
Last Updated : 23 Apr 2023 06:40 PM

அறிக்கை என்னவானது?- டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டம்

புதுடெல்லி: பெண் மல்யுத்த வீராங்கனைகள் பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாகக் கூறி கடந்த ஜனவரியில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இன்று மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இந்த முறை இரண்டு நாட்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட பாலியல் புகார் குறித்து இதுவரை முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யாததைக் கண்டித்தும், ஏற்கெனவே நடந்த விசாரணைக் குழுவின் அறிக்கை விவரத்தைக் கோரியும் வீராங்கனைகள் போராடி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அவர்கள் திரண்டுள்ளனர்.

போராட்டம் குறித்து சாக்‌ஷி மாலிக் கூறுகையில், "மத்திய டெல்லி கனோட் ப்ளேஸ் காவல் நிலையத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ்பூஷண் சரண் சிங்குக்கு எதிராக 7 மல்யுத்த வீராங்கனைகள் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் மீது இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "அரசுக் குழுவின் அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. மல்யுத்த வீராங்கனைகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த அந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும். இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம். இதில் புகார் கொடுத்தவர்களில் ஒருவர் மைனர் பெண். புகார்தாரர்களின் பெயரை வெளியிடக் கூடாது. ஆனால் அந்த அறிக்கையின் விவரத்தை பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

"பிரிஜ்பூஷண் சரண் கைது செய்யப்படும் வரை நாங்கள் இங்கிருந்து நகரப்போவதில்லை" என்று மற்றொரு வீராங்கனையான பஜ்ரங் புனியா கூறியுள்ளார்.

"பலகட்ட முயற்சிக்குப் பின்னரும் கூட அரசுத் தரப்பிலிருந்து எங்களுக்கு எவ்வித உரிய பதிலும் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் இங்கேயே சாப்பிட்டு, இங்கேயே தூங்கி, இங்கேயே போராடப் போகிறோம். நீதி கிடைக்கும்வரை நாங்கள் ஓயமாட்டோம். விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை தொடர்பு கொள்ள நாங்கள் முயன்றோம். மூன்று மாதங்களாக முயற்சித்துவிட்டோம். விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள்கூட எங்களுக்கு பதிலளிப்பதில்லை. எங்கள் தொலைபேசி அழைப்பை யாருமே ஏற்பதில்லை. இந்த தேசத்திற்காக பதக்கங்களை வென்று கொடுத்திருக்கிறோம். ஆனால் இன்று எங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது" என்று வினேஷ் போகத் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த ஜனவரி 23 ஆம் தேதி மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அந்தக் குழுவிற்கு வலியுறுத்தப்பட்டது. ஏப்ரல் முதல் வாரத்தில் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதன் விவரம் இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இன்று மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ட்வீட்: இதற்கிடையில் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் குறித்து ஏன் இன்னமும் முதல் தகவல் அறிக்கை பதிவிடவில்லை என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லி கனாட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் ஒரு மைனர் பெண் உள்பட மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜிபூஷன் சரண் மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளனர். இதில் ஏன் இன்னமும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. இது சட்டவிரோதமானது. இவ்விவகாரத்தில் காவல்துறை டெல்லி மகளிர் ஆணையத்திற்கு 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x