Published : 01 Sep 2017 11:22 AM
Last Updated : 01 Sep 2017 11:22 AM

குர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை அளித்த நீதிபதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு தண்டனை அளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜக்தீப் சிங்குக்கு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியாணாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமத்தை நடத்தி வந்தவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவருக்கு பல வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் உள்ளன. தன்னை கடவுளாக கூறிக் கொண்டு ஆடம்பரமாக வலம் வந்தவர். திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

பெண் சீடர்கள் 2 பேரை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜக்தீப் சிங் விசாரித்து, குர்மீத்தை குற்றவாளி என்று அறிவித்தார்.

அதன்பின் அவரது ஆதரவாளர்கள், பஞ்சாப், ஹரியாணா, டெல்லி உட்பட பல பகுதிகளில் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் முப்பதுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர். அதன்பின், இரு மாநிலங்களிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

கடந்த மாதம் 28-ம் தேதி குர்மீத் சிங்குக்கு 2 வழக்குகளில் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, அவர் ரோட்டக் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜக்தீப் சிங்குக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்துள்ளது.

இதையடுத்து, நீதிபதி ஜக்தீப் சிங்குக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மிரட்டல் எந்தளவுக்கு உள்ளது என்பதை பொறுத்து அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் 4 நிலைகளில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதில் இசட் பிளஸ் என்பதுதான் உச்சபட்ச பாதுகாப்பு நிலையாகும்.

55 வீரர்கள்

இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நீதிபதிக்கு 55 வீரர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இதில் தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் 10 பேர் மற்றும் போலீஸாரும் அடங்குவர். மிரட்டலுக்கு ஆளாகும் பிரமுகருக்கு போலீஸ் மற்றும் மாநில அரசு பாதுகாப்பு வழங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x