Published : 15 Mar 2023 01:40 PM
Last Updated : 15 Mar 2023 01:40 PM

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சிகள்

புதுடெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கும் நோக்கில், நாடாளுமன்றத்தில் இருந்து பேரணியாகச் சென்ற எதிர்கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

முடங்கும் நாடாளுமன்றம்: பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் திங்கள் கிழமை தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக, அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சுக்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினரும் அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து மூன்றாவது நாளாக, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் செயல்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் பேரணி: இந்தநிலையில், இன்று (மார்ச் 15) நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக, அதானி விவகாரத்தில் ஒரு கூட்டு முடிவினை எடுப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சி தலைவர் அறையில் கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அதானி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கும் நோக்கில், நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சியினர் பேரணியாகச் சென்றனர். அனுமதி இன்றி பேரணியாகச் சென்றதால் எதிர்கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

முன்னதாக, நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள சாலையில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல், நாடாளுமன்றத்தின் முன்பு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. நாடாமன்றத்தின் வெளியே இரண்டு தடுப்புகள் வைக்கப்பட்டன. எதிர்கட்சிகளின் இந்த பேரணியில் திரிணாமூல் காங்கிஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கவில்லை.

அதானி விவகார பின்னணி: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், பங்குகள் கையாளுதல் மற்றும் நிதிமோசடியில் அதானி குழுமம் ஈடுபட்டதாக கூறியிருந்தது. இந்த குற்றச்சாட்டினை ஆதாரமற்றது என்று அதானி குழுமம் மறுத்திருந்தது. இந்தநிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவினை அதானி குழுமம் வரவேற்றிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x