ஆஸ்கார் விருதுகள் முதல் நாடாளுமன்ற அமளி வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 13, 2023

ஆஸ்கார் விருதுகள் முதல் நாடாளுமன்ற அமளி வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 13, 2023
Updated on
3 min read

ஆஸ்கர் வென்றது இந்தியாவின் ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’: அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. இந்த ஆவணப் படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விருது பெற்றது குறித்து, தயாரிப்பாளர் குனீத் மோங்கா கூறும்போது, "இந்தியாவின் தயாரிப்புக்காக நாங்கள் முதல்முறையாக ஆஸ்கர் விருது வாங்கியிருக்கிறோம். இரண்டு பெண்கள் இதனைச் செய்திருக்கிறார்கள். எனக்கு இன்னும் நடுக்கம் நிற்கவில்லை" என்று படத்தின் தெரிவித்துள்ளார்.

காட்டின் நாயகர்களான யானைகளுக்கும் காட்டு நாயகன் பழங்குடி தம்பதிகளுக்கும் இடையேயான கமுக்கமானதொரு உறவைச் சொல்லுகிறது ‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படம். மும்பையைச் சேர்ந்த கார்த்திகி கோன்சால்வஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர்!: ‘ஆர்ஆர்ஆர்’படத்தின் ‘‘நாட்டு நாட்டு’’ பாடல், சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. ஆஸ்கர் மேடையில் இசையமைப்பாளர் கீரவாணியும், பாடலாசிரியர் சந்திரபோஸும் விருதைப் பெற்றனர்.

ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் ஏற்கெனவே கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் மற்றும் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ படக்குழுவுக்கு பிரதமர் மோடி , முதல்வர் ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி, “நாட்டு நாட்டு பாடலின் புகழ் உலகளாவியது. இன்னும் பல வருடங்கள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும். இந்த மதிப்புமிக்க பெருமையை பெற்றுக்கொடுத்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தியா மகிழ்ச்சி மற்றும் பெருமை கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

7 ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ : டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான படம் “எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்”. இந்தப் படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்று உலக அரங்கில் சாதனை படைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை படத்தில் நடித்த மிஷெல் யோ வென்றுள்ளார். டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இருவரும் சிறந்த இயக்குநர்களுக்கான விருதை பெற்றுள்ளனர். சிறந்த படத்தொகுப்பு, சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த உறுதுணை நடிகை உள்ளிட்ட 7 விருதுகளைப் பெற்று இந்தப் படம் மிரட்டியுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்: நடப்பு ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. தமிழ்ப் பாடத்தில் பெரும்பாலான வினாக்கள் எளிதாக இருந்தன. ஆனால் ஒரு மதிப்பெண் வினாக்கள் 'வரலாறு' பாடம்போல் ஆண்டுகளை குறிக்கும் வகையில் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இன்ஃப்ளூயன்சா பரவலை தடுக்க தொடர்ந்து காயச்சல் முகாம்: தமிழகத்தில் இன்ஃப்ளூயன்சா தொற்று பரவலை தடுக்க தொடர்ந்து காயச்சல் முகாம் நடத்தப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் வரை இன்ஃப்ளூயன்சா எச்1என்1 பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் பிப்ரவரி 28-ம் தேதி வரை எச்1என்1 தொற்றால் பாதிக்கப்பட்ட 955 பேரில் 545 பாதிப்புகள் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறவன் - குறத்தி ஆட்டத்திற்குத் தடை: தமிழக அரசு உத்தரவு: தமிழகத்தில் குறவன்- குறத்தி என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் திருவிழாக்களில் குறவன், குறத்தி ஆட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த உத்தரவில், "தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் 40-வது இடத்தில் இடம்பெற்றுள்ள குறவன் - குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து அரசு உத்தரவிடுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு: மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட கூட்டம் கடந்த மாதம் 10-ம் தேதி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கியது. அப்போது தனது லண்டன் பேச்சு தொடர்பாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஆளுங்கட்சின் கோரிக்கைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கூச்சல் எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா: அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் 5-ம் நாளான திங்கள்கிழமை ஆஸ்திரேலியா அணி தன் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பார்டர் - கவாஸ்கர் டிராபியை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றதோடு, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியாவைச் சந்திக்க இருக்கின்றது.

இதனிடையில், கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான திங்கள்கிழமை கேன் வில்லியம்சன் அதியற்புத சதத்தால், நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் இலங்கையின் நம்பிக்கை தகர்ந்தது. இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. ஜூன் மாதம் லண்டன் ஓவலில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெறுகின்றது.

"SVB வங்கி திவால் - இந்திய நிதித் துறையை பாதிக்காது": அமெரிக்காவின் SVB வங்கி திவாலாகி இருப்பது, இந்திய நிதித்துறை கட்டமைப்பை பாதிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை மையமாகக் கொண்டு செயல்பட்ட எஸ்விபி எனப்படும் சிலிகான் வேல்லி பேங்க் திவாலானதை அடுத்து அந்த வங்கி கடந்த 10ம் தேதி மூடப்பட்டது. இது இந்திய நிதிச்சந்தையை பாதிக்குமா என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுகுறித்து பேட்டி அளித்துள்ள மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர், SVB வங்கி திவாலானதால் இந்திய நிதிச் சந்தை பெரிய பாதிப்புகள் எதையும் எதிர்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் வரலாறு காணாத போராட்டம்: இஸ்ரேலில் நீதித்துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான அந்நாட்டு அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 வாரங்களாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நீதித்துறை அதிகாரத்தை மாற்றியமைக்கும் மசோதாவை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் பிரதமர் நெதன்யாகு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in