Published : 13 Mar 2023 07:32 AM
Last Updated : 13 Mar 2023 07:32 AM

ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’

சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர். 2017-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றித்திரிந்தது. இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வந்து, ரகு என பெயர் வைத்து பொம்மனும், பெள்ளியும் பராமரித்து வருகின்றனர்.

தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானை குட்டிகளை பராமரிக்கும் பழங்குடியினத் தம்பதியின் கதையை ஆவணப்படமாக்கி இருக்கிறார் உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ். இந்நிலையில் தான் தற்போது ஆஸ்கர் விருது வென்றுள்ளது ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’.

முன்னதாக, சிறந்த டாகுமென்டரி திரைப்படப் பிரிவில் இடம்பெற்ற இந்திய திரைப்படமான ஆர் தட் ப்ரீத்ஸ் படம் ஆஸ்கர் விருது வெல்லவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x