

மதுரை: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வு இன்று தமிழ்ப் பாடத் தேர்வுடன் தொடங்கியது. இதில் பெரும்பாலான வினாக்கள் எளிதாக இருந்தன. ஆனால் ஒரு மதிப்பெண் வினாக்கள் 'வரலாறு' பாடம்போல் ஆண்டுகளை குறிக்கும் வகையில் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வை பிளஸ் 2 பொதுத் தேர்வை 323 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மொத்தம் 37,457 பேர் 116 மையங்களில் தேர்வு எழுதினர். மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கா.கார்த்திகா ஆகியோர் பார்வையிட்டனர்.
பிளஸ் 2 தமிழ்ப் பாடத் தேர்வு குறித்து மாணவர்கள் கூறியது: ''புத்தகத்திலுள்ள புறநிலை வினாக்களில் இருந்து கேள்விகள் வரும் என்பதால் அதனைப் படித்து தயாராகினோம். ஆனால் எளிதாக இருக்கும் என எதிர்ப்பார்த்த ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தது. மற்ற பிரிவுகளில் இருந்த வினாக்கள் எளிதாக இருந்தன.
இலக்கணம், துணைப்பாடம், மனப்பாடப் பாடல்கள் எளிதாக எதிர்பார்த்ததுபோல் இருந்தது. 6 மதிப்பெண் வினாக்களில் பிளஸ் 2-விலுள்ள திருக்குறள் பகுதியிலிருந்து அறிவுடைமை, செய்நன்றி அறிதல் பகுதியிலிருந்து கேள்வி கேட்காமல் பிளஸ் 1ல் படித்த 'திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் - நிறுவுக' என்ற கேள்வியை கேட்டதால் சிரமமாக இருந்தது,'' என்றனர்.
இதுகுறித்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள பாரப்பத்தி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் முத்துலெட்சுமி கூறியதாவது: ''ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தது. கரோனா கால கட்டம் என்பதால் பெரும்பாலும் மாணவர்கள் புத்தகத்திலுள்ள புறநிலை வினாக்களைப் படித்து தயாராகினர். இதில் புத்தகத்திற்கு உள்ளிருந்து கேட்டதால் மாணவர்கள் சிரமப்பட்டனர்.
மேலும், 2 மதிப்பெண், 4 மதிப்பெண், 6 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. துணைப்பாடம், மனப்பாடப் பாடல்கள் எதிர்பார்த்ததுபோல் இருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததால் மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் எடுக்க வாய்ப்பில்லை” என்றார்.