Last Updated : 08 Mar, 2023 11:10 AM

 

Published : 08 Mar 2023 11:10 AM
Last Updated : 08 Mar 2023 11:10 AM

நாள்பட்ட நோய், முதியோர் கைதிகளை விடுவிக்க உபி அரசு முடிவு: விவரங்கள் கேட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத்

முதல்வர் யோகி ஆதித்யநாத் | கோப்புப்படம்

புதுடெல்லி: ஆயுள் தண்டனை பெற்ற நாள்பட்ட நோய், முதியோர் கைதிகளை விடுவிக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, அம்மாநிலத்தின் 75 மாவட்ட சிறைகளிலும் இருப்பவர்களின் விவரங்களை கேட்டுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநில அரசு தன் சிறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. கடந்த வருடம் முதல் துவங்கிய இந்த மாற்றங்களில் புதிதாக ஒரு முடிவை பாஜக ஆளும் அரசு எடுத்துள்ளது.

இதன்படி, ஆயுள் தண்டனை பெற்று நெடுநாட்களாக நோயால் அவதிப்படுபவர்களையும், எழுபதிற்கும் அதிகமான முதிய வயது கைதிகளையும் விடுதலை செய்ய உள்ளது. இவர்களில் நாட்கால நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளில் பலரும் சிறைகளில் சிக்கியதன் காரணமாக இறப்பிற்கும் உள்ளாகி வருகின்றனர்.

இது போன்றவர்கள், தம்மை விடுவிக்கக் கோரி பாஜகவிற்கும் முன்பாக உபியில் ஆட்சி செய்த அரசுகளிடமும் கேட்டிருந்தனர். மிக முக்கியமாக கருதப்படும் இம்முடிவால் உபியின் பல ஆயிரம் கைதிகள் விடுதலையாகும் சூழல் உருவாகி உள்ளது.

அதேபோல், எழுபதுக்கும் அதிகமான மூத்த வயது கைதிகளும் பலன் பெற உள்ளனர். இந்த இரண்டு தரப்பினரை சிறைகளில் வைத்து பராமரிப்பது உபி அரசுக்கு பெரும் சிக்கலாக உள்ளது.

இந்த இரண்டு வகை கைதிகளின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே இந்த விடுதலை வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. இந்த முடிவில் தீவிரவாதக் குற்றங்களை செய்து ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு பலன் கிடைக்குமா? என்பது தெரியவில்லை.

எனினும், முதியோர் மற்றும் நாட்கால நோய் கொண்ட கைதிகளின் விவரங்களை கேட்டு, தலைமை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா உபியின் சிறைகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இவற்றை இரண்டு வாரங்களில் அனுப்பக் கோரியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை பெற்ற பின் உபி சட்டத்துறையின் சேவை ஆணையம், அவர்களை விடுவிப்பதற்கான விதிகளை தம் அரசிற்கு பரிந்துரைக்கும். இதன் மீது முதல்வர் யோகி இறுதி முடிவு எடுத்து விடுதலைக்கான தேதியை அறிவிக்க உள்ளார்.

இதுபோல், உபியின் கைதிகளுக்கு சாதகமான பாஜக அரசால் அளிக்கப்படுவது புதிதல்ல. தண்டனைக் காலம் முடிந்தும் அதனுடன் சேர்த்து விதிக்கப்பட்ட அபராதத் தொகை கட்ட முடியாமலும் பல சிறைவாசிகள் உபியில் உள்ளனர்.

இவர்களுக்காகவும் ஒரு திட்டம் வகுத்து அவர்கள் விடுதலைக்கு உதவ உபி முதல்வர் யோகி அறிவித்திருந்தார். கைதிகளுக்கான உணவு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு தேநீர், அனைத்து மதங்களின் பண்டிகை காலங்களில் சிறப்பு உணவு உள்ளிட்ட வசதிகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டன.

பெரும்பாலான சிறைக் கைதிகள் அறைகளில் அடைக்கப்படுவதும் குறைந்து வருகிறது. ஒரே குடும்பத்தின் கைதிகளை சிறைகளின் உள்ளே சந்தித்து பேச அனுமதிக்கப்படுவது உள்ளிட்ட மேலும் பல வசதிகளும் உபியில் படிப்படியாக அறிமுகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x