Last Updated : 21 Sep, 2017 10:29 AM

 

Published : 21 Sep 2017 10:29 AM
Last Updated : 21 Sep 2017 10:29 AM

கள்ளச் சாராய உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை: சட்ட திருத்தம் செய்ய உ.பி. அரசு முடிவு

உத்தரபிரதேசத்தில் கள்ள சாராய உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லி, குஜராத்துக்கு அடுத்தபடியாக 3-வது மாநிலமாக இதுபோன்ற சட்டம் கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி மாநில அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் உத்தரபிரதேச கலால் சட்டத்தில் (1910), சட்ட விரோதமாக மது உற்பத்தி (கள்ள சாராயம்) செய்வோருக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில கலால் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் கூறும்போது, “கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை உதவும். இப்போது சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவில்லை. எனவே, இது தொடர்பாக விரைவில் அவசர சட்டம் கொண்டுவரப்படும். சட்டப்பேரவை கூடும்போது, மசோதா நிறைவேற்றப்படும்” என்றா்.

இந்த சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 60ஏ பிரிவின்படி, கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்தாலோ அல்லது நிரந்த ஊனமடைந்தாலோ இதற்குக் காரணமானவர்களுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் அல்லது வழக்கின் தன்மையைப் பொறுத்து மரண தண்டனை விதிக்க முடியும்.

கலால் சட்டம் மிகவும் பழமையானது என்பதால் அதில் திருத்தம் செய்ய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. கடும் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொண்டால் கள்ளச்சாராயம் மற்றும் கடத்தலைத் தடுக்க முடியும் என அரசு கருதுகிறது.

கள்ளச் சாராயத்தால் அப்பாவி கள் பலியாவதுடன் கலால் வரி வருமானமும் கணிசமாக பாதிக்கப்படுகிறது. ஹரியாணா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களிலிருந்து கள்ளச் சாராயம் கடத்தி வரப்படுவதால் வரி வருவாய் இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x