Published : 27 Jan 2023 01:27 PM
Last Updated : 27 Jan 2023 01:27 PM

சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் திருத்தியமைக்கப்பட வேண்டும்: பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்

பிரதிநிதித்துவப்படம் | படம்: கமல் நரங்

புதுடெல்லி: சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் 1960-ஐ மாற்றி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த நோட்டீஸ், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஆணையத்தின் சம்பந்தப்பட்ட ஆணையர்கள் மூலமாக ஜனவரி 25-ம் தேதி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியது: "இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதன் நோக்கம், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தின் விதிமீறல்களைச் சரிசெய்வதற்கான இருநாடுகளின் பேச்சுவார்த்தைக்கு வர பாகிஸ்தான் அரசுக்கு 90 நாட்களுக்கு வாய்ப்பளிப்பதேயாகும். இந்த நடைமுறை கடந்த 62 ஆண்டுகளில் கற்றுக்கொண்ட பாடங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் உதவும்.

சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா எப்போதுமே ஒரு சிறந்த கூட்டாளியாக செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், ஒப்பந்த ஷரத்துக்களை மீறுவதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதிலும் பாகிஸ்தான் அரசின் செயல்பாடுகள், இந்தியாவை ஒப்பந்தத்தை மாற்றியமைப்பதற்கான நோட்டீஸ் அனுப்பும்படி நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு, இந்தியாவின் கிஷங்கங்கா மற்றும் ரடில் நீர்மின் திட்டங்களுக்கான தொழில்நுட்ப ஆட்சேபங்களை ஆய்வு செய்ய ஒரு நடுநிலை நிபுணரை நியமிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்தது. பின்னர், 2016-ல் தன்னிச்சையாக இந்தக் கோரிக்கையை திரும்ப பெற்ற பாகிஸ்தான் தனது ஆட்சேபனை தொடர்பாக நடுவர் நீதிமன்றத்தை நாடியது.

பாகிஸ்தானின் தன்னிச்சையான இந்த நடவடிக்கை, தகராறுகளைத் தீர்ப்பதற்கான சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தின் பிரிவு IX-க்கு முரணானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஒரு நடுநிலை நிபுணரை நியமிக்கும்படி இந்தியா தனியாக கோரிக்கை விடுத்தது.

ஒரு கேள்வி தொடர்பாக, ஒரே நேரத்தில் இரண்டு நடைமுறைகளைத் தொடங்குவது, அவைகளின் சீரற்ற முரண்பாடான, சட்டங்களுக்கு புறம்பான விளைவுகள், முன்தீர்மானிக்க முடியாத, ஏற்றுக்கொள்ளமுடியாத சூழல்களை உருவாக்கும். இது சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். கடந்த 2016-ம் ஆண்டு இதனை ஏற்றுக்கொண்ட உலக வங்கி, ஒரேநேரத்திலான இரண்டு நடைமுறைகளை நிறுத்துவதற்கான முடிவினை எடுப்பதற்கும், இதனை தீர்ப்பதற்கு சரியான வழிமுறைகளை கண்டறிவதற்கும் இந்தியா - பாகிஸ்தான் வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.

இதுதொடர்பாக ஒருங்கிணைந்து தீர்வு காண்பதற்கு இந்தியா முயற்சி செய்தது. ஆனாலும், 2017 முதல் 2022 வரை நடந்த சிந்து நதிக்கான நிரந்தர ஆணையத்தின் ஐந்து கூட்டங்களிலும் இதுகுறித்து பேச பாகிஸ்தான் மறுத்து விட்டது.

பாகிஸ்தான் அரசின் தொடர் வற்புறுத்தல் காரணமாக சமீபத்தில் உலக வங்கி, நடுநிலை நிபுணர் மற்றும் நடுவர் நீதிமன்றம் ஆகியவை குறித்த நடவடிக்கை எடுத்தத் தொடங்கியுள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைகள் சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்ததின் எந்த ஷரத்தையும் உள்ளடக்கி இல்லை. பாகிஸ்தான் அரசின் இவ்வாறான தொடர் எதிர்நடவடிக்கைகளால் நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x