Published : 27 Jan 2023 09:13 AM
Last Updated : 27 Jan 2023 09:13 AM

மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி - வீடு வீடாக கடிதம் அளிக்கிறது காங்கிரஸ்

புதுடெல்லி: மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி வீடு, வீடாக கடிதம் அளிக்கும் புதிய பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது.

காங்கிரஸை வலுப்படுத்த அந்த கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாரத ஒற்றுமை பேரணியை தொடங்கினார். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி வீடு வீடாக கடிதம் அளிக்கும் இயக்கத்தை காங்கிரஸ் நேற்று தொடங்கியது.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறும்போது, “குடியரசு தின நாளில் புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம். இதன்படி நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களில் வீடு வீடாக கடிதம் அளிக்கதிட்டமிட்டுள்ளோம். இந்த பிரச்சாரம் மார்ச் 26-ம் தேதி நிறைவடையும்" என்று தெரிவித்தன.

சமையல் காஸ், பெட்ரோல், உணவு தானியங்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்திருப்பது குறித்து கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அதாவது, கடந்த 2004-ல் சமையல் காஸ்சிலிண்டர் விலை ரூ.410 ஆக இருந்தது. தற்போது ரூ.1,050 ஆக உள்ளது என்று கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதேபோல பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 10 மாநில பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x