Published : 19 Jan 2023 06:18 PM
Last Updated : 19 Jan 2023 06:18 PM

‘கண்ணியமானது அல்ல’ - பிரதமர் மோடி குறித்த பிபிசி-யின் ஆவணப்படத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு

பிரதமர் மோடி | கோப்புப் படம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி-யின் ஆவணப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, காலனியாதிக்க மனோபாவத்துடன் ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு, அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி ஆவணப்படம் தயாரித்துள்ளது. 'இந்தியா: மோடிக்கான கேள்விகள்' எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், ''இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்தியாவின் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையே இருக்கும் பதற்றங்களை பாருங்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட 2002 குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு உள்ள பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ''இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை தயாரித்த நிறுவனத்தை இது பிரதிபலிக்கிறது. ஒரு சார்பான ஆவணப்படம் இது. காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை இது காட்டுகிறது. இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல'' என விமர்சித்துள்ளார்.

குஜராத்தில் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், குஜராத் கலவரத்தின்போது முதல்வராக இருந்த பிரதமர் மோடி எந்த தவறும் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என அறிவித்தது.

கலவரம் நடந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையிலும், நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்துவதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. நரேந்திர மோடிக்கு எதிராக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு தகுதியற்றது என்றும், உள்நோக்கம் கொண்டது என்றும் கூறி ரத்து செய்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x