Published : 19 Jan 2023 05:10 PM
Last Updated : 19 Jan 2023 05:10 PM

பிஹார் | வங்கிக் கொள்ளையர்களை விரட்டியடித்த இரண்டு பெண் காவலர்கள்

லக்னோ: பிஹாரில் வங்கிக் கொள்ளையர்களை இரண்டு பெண் காவலர்கள் துணிச்சலாக விரட்டியடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிஹார் மாநிலம் ஹாஜிபூர் மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ஹாரிபூர் மாவட்டத்தில் செந்துவாரி சவுக் பகுதியில் உள்ள ஒரு வங்கியின் வாயிலில் இரண்டு பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். அப்போது அங்கு சில கொள்ளையர்கள் வந்தனர். அவர்களை நிறுத்திய பெண் காவலர், உள்ளே நுழைய ஏதேனும் ஆவணம் காட்டுமாறு கேட்கிறார். அப்போது அந்த நபர் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து நீட்டுகிறார். அதிர்ந்துபோகாமல் நிலைமையை உணர்ந்து கொள்ளும் இரண்டு பெண் காவலர்களும் அந்த நபர்களுடன் சண்டை போடுகின்றனர்.

ஜூஹி குமாரி, சாந்தி என்ற இரண்டு பெண் காவலர்களும் துணிச்சலுடன் போராடுகின்றனர். சிறிது நேரம் அந்த முகமூடி நபர்கள் போராடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிடுகின்றனர். அவர்களுடனான சண்டையில் காவலர் ஜூஹி குமாரி காயமடைந்தார்.

இது குறித்து அவர், "அந்த மூன்று நபர்களும் சந்தேகப்படும்படி இருந்தனர். அதனால்தான் அவர்களிடம் வங்கியில் நுழைவதற்கு ஆதாரமாக ஏதேனும் ஆவணங்களைக் காட்டச் சொன்னேன். அப்போதுதான் அந்த நபர் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். என் கையில் இருந்த துப்பாக்கியையும் பறிக்க முயன்றனர். சண்டையில் என் பல் உடைந்தது. எனது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் நாங்கள் இருவரும் சண்டையிட்டோம்" என்றார்.

உடன் இருந்த மற்றொரு காவலர் சாந்தி கூறுகையில், "எங்களிடமிருந்த துப்பாக்கியை பறித்துவிட முயன்றனர். ஆனால், நாங்கள் அவர்களிடம் அதை விட்டுக்கொடுக்கவில்லை. என்னவானாலும் அவர்களை வங்கியைக் கொள்ளையடிக்க விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்" என்று கூறினார்.

இந்த கைகலப்பு குறித்து அங்கிருந்தவர்கள் போலீஸுக்கு தகவல் கொடுக்க உடனடியாக போலீஸார் அங்கு வந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர்களை தேடிவருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் உயர் அதிகாரி ஓம் பிரகாஷ் கூறும்போது, "செந்துவாரியில் உள்ள வங்கியில் நேற்று காலை 11 மணியளவில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த இரண்டு பெண் காவலர்கள் துணிச்சலுடன் விரட்டியடித்துள்ளனர். அவர்களின் பணியைப் பாராட்டுகிறோம். அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்" என்றார்.

பெண் காவலர்கள் துணிச்சலுடன் கொள்ளையர்களை எதிர்கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு பெண் காவலர்களுக்கும் இணையவாசிகள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x