Published : 19 Jan 2023 08:51 AM
Last Updated : 19 Jan 2023 08:51 AM

விமானத்தின் அவசர கதவு திறந்த விவகாரம் - பாஜக எம்பி தேஜஸ்வி மீதான புகாருக்கு அமைச்சர் பதில்

புதுடெல்லி: கர்நாடக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா. இவர் கடந்த டிசம்பர் 10-ம் தேதி சென்னையிலிருந்து திருச்சி சென்ற இன்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். அப்போது, அவர் விமானத்தின் அவசர கால கதவை திறந்துவிட்டார்.

இதையடுத்து, விமானத்தின் உட்புற அழுத்தம், கதவை சரி செய்யும் பணிகளை பொறியாளர்கள் உடனடியாக மேற்கொண்டனர். பின்னர் அந்த விமானம் 2 மணி நேரம் தாமதமாக திருச்சி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்துக்கு இன்டிகோ நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியது.

பாஜக எம்.பி.யின் இந்த செயல் மற்ற பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய தாகவும், விமானம் பறக்கும்போது அந்த கதவு திறக்கப்பட்டிருந்தால் பயணிகளின் நிலைமை என்னவாகி இருக்கும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.

இந்நிலையில் ஒரு மாதத் துக்குப் பிறகு "பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா விமானத்தின் கதவை தவறுதலாக திறந்து விட்டார்" என விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ இந்த விவகாரத்தில் பயணி வலது புறத்தில் இருந்த அவசர கால வழியை தவறுதலாக திறந்து விட்டார். இந்த தற்செயல் நிகழ்வுக்காக அந்தப் பயணியும் (தேஜஸ்வி சூர்யா) உடனடியாக மன்னிப்பு கேட்டுவிட்டார். கவனக்குறைவாக இல்லாமல் இருப்பதுதான் முக்கியம். இந்த சம்பவத்துக்குப் பிறகு அனைத்து சோதனைகளும் நிறைவடைந்த பின்னரே விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டது" என்றார்.

விமானத்தில் தேஜஸ்வியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணா மலையும் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. பயணிகளின் உயிருடன் விளையாடிய தேஜஸ்வி மன்னிப்பு கேட்டுவிட்டால் போதுமா? இந்த விவகாரத்தில் அவர் மீது ஏன் தீவிரமாக நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கடந்த ஒரு மாதமாக கேள்வியெழுப்பி வரும் நிலையில் அமைச்சர் சிந்தியா தற்போது அதற்கு விளக்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x