Last Updated : 18 Jan, 2023 08:26 PM

2  

Published : 18 Jan 2023 08:26 PM
Last Updated : 18 Jan 2023 08:26 PM

பாஜகவினர் இனி தவறான கருத்துகளை கூறினால், அது பிரதமர் மோடியை அவமதிப்பதற்கு சமம்: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம்

கோப்புப்படம்

புதுடெல்லி: முஸ்லிம்கள் மீது அனாவசியமாகக் கருத்துகளை கூறுவதை தவிர்க்கும்படி பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பாஜகவினர் இனி முஸ்லிம் சமூகத்தினர் மீது தவறானக் கருத்துகளை கூறினால் அது, பிரதமர் மோடியை அவமதிப்பதற்கு சமம் என அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தினர் கருத்து கூறியுள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை தொடங்கி பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் இரண்டு நாள் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில தலைவர்கள், 12 முதல்வர்கள், 5 துணை முதல்வர்கள் உள்ளிட்ட 350 தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தம் கட்சியினர் முன் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், சிறுபான்மை முஸ்லிம்கள் மீது அனாவசியமாகக் கருத்துகளை கூறுவதை தவிர்க்கும்படி தங்களது கட்சியினருக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இந்தத் தகவலை, டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வீயும் உறுதிப்படுத்தி இருந்தார். இதையடுத்து, பிரதமர் மோடியின் அறிவுறுத்தல் மீது அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தினரின் கருத்து கூறியுள்ளனர்.

இது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினரான கமால் ஃபரூக்கி கூறும்போது, ‘பிரதமர் மோடி தன் கட்சியினருக்கு கூறிய அறிவுறுத்தலை நான் வாரியத்தின் சார்பில் வரவேற்கிறேன். பிரதமரின் இந்த கருத்திற்கு நல்ல பலன் இருக்குமெனக் கருதுகிறேன். இதன் பிறகும் பாஜகவினர், முஸ்லிம்கள் மீது தவறானக் கருத்துகளை கூறினால் அது, பிரதமர் மோடியை அவமதிப்பதற்கு சமம்.

இத்துடன் நான், நம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வேண்டுவது என்னவெனில் இதுபோல், தவறானக் கருத்துக்களைக் கூறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன். இதேபோல், முஸ்லிம்களும் இந்துக்கள் மீது தவறானக் கருத்துகளை கூறினால் அதன் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கலாம். பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதால், நாம் அவரது கருத்தை மிகவும் மதிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

கடந்த 2014-இல் பாஜக தலைமையிலான மத்திய அரசு அமைந்தது முதல், சிறுபான்மை முஸ்லிம்கள் மீது பல்வேறு சர்ச்சை கருத்துகள் அதிகமாக வெளியாகிறது. இவற்றை பெரும்பாலும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கூறி வருகின்றனர். வரும் 2024-இல் மக்களவை தேர்தல் வரும் நிலையில், பாஜக தலைமை தன் ஆட்சியை மூன்றாவது முறையாக தொடர முடிவு செய்துள்ளது. இதற்கான முயற்சியில் ஒன்றாக பிரதமர் மோடி, முஸ்லிம்கள் மீதான அறிவுறுத்தலை வெளியிட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x