Last Updated : 25 Dec, 2022 06:27 AM

 

Published : 25 Dec 2022 06:27 AM
Last Updated : 25 Dec 2022 06:27 AM

தேசிய ஒற்றுமை யாத்திரையை தற்காலிகமாக நிறுத்திய ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப் டம்பர் 7-ம் தேதி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’யை தொடங்கினார். 108-வது நாளான நேற்று இந்த யாத்திரை பதர்பூர் வழியாக காலை 6 மணிக்கு தலைநகர் டெல்லியில் நுழைந்தது.

பதர்பூரிலிருந்து பிரண்ட்ஸ் காலனி வரை 8 கி.மீ தொலைவை ராகுல் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கடந்து வந்தார். சிறிய இடைவேளைக்கு பின் நடைபயணத்தை தொடர்ந்த அவர் மதியம் ஒரு மணிக்கு செங் கோட்டையில் முடித்தார்.

இங்கு மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் கிளம்பிய யாத்திரை, காந்தி சமாதி உள்ள ராஜ்காட்டில் தற்காலிகமாக நிறைவடைந்தது. இதற்கு முன்னதாக, முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் சமாதிகளில் மட்டுமின்றி அடல் பிஹாரி வாஜ்பாயின் சமாதியிலும் ராகுல் அஞ்சலி செலுத்தினார்.

டெல்லியில் நுழைந்த யாத்திரை யில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா, அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.

முன்னதாக சோனியா தனது மகன் ராகுலை கட்டியணைத்து நெகிழ்ச்சியுடன் வரவேற்றார். டெல்லியில் நுழைந்ததும் ராகுல் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். அடுத்து டெல்லியின் முக்கிய தர்காவான ஹசரத் நிஜாமுத்தீனுக்கும் சென்று போர்வை அர்ப்பணித்தார்.

ராகுல் யாத்திரையின் நோக்கம் அரசியல் லாபம் தேடுவதல்ல என்று காங்கிரஸ் கூறி வருகிறது.

இருப்பினும் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் கட்சியை வலுவாக்கவே இந்த யாத்திரையை ராகுல் நடத்துவது அனைவரும் அறிந்ததே.

டெல்லியில் நுழைவதற்கு முன், ஹரியாணாவின் பரீதாபாத்தில் தொண்டர்கள் முன் ராகுல் பேசும் போது, “2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்று பிரதமர் மோடி குரல் கொடுத்தார். காங்கிரஸ் என்பது அமைப்போ, அரசியல் கட்சியோ அல்ல. இது யோசித்து வாழ வகை செய்வது ஆகும். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வெறுப்பின் சந்தையாக உள்ளது. அதில் கடை அமைத்து காங்கிரஸ் அன்பை விநியோகிக்கிறது. அவர்கள் வெறுப்புடன் அச்சத்தையும் பரப்புகின்றனர். நாங்கள் பதிலுக்கு அன்பு, தைரியம் மற்றும் அகிம்சையை பரப்பி வருகிறோம். கடந்த 7 ஆண்டுகளாக என் மீதும் காங்கிரஸ் மீதும் பழி சுமத்த பல ஆயிரம் கோடிகளை பிரதமர் மோடி செலவிட்டுள்ளார். இதில் அவர்கள் வைக்கும் புகார்களுக்கு நான் பதில் அளிப்பதில்லை. அமைதியாகவே இருந்து அவர்களின் பல கோடிகளை நான் வீணாக்கினேன். விவசாயிகள், சிறு வியாபாரிகள், பாமர மக்களின் ஆயுதமாக காங்கிரஸ் மாறி, வரும் தேர்தலில் அவர்களுடன் நிற்கும். தற்போதைய அரசு மோடியின் அரசு அல்ல. பெருந்தொழிலதிபர்களான அதானி, அம்பானியால் இந்த அரசு நடத்தப்படுகிறது” என்றார்.

இதுபோல், அரசியல் பேசுவ தாலோ, என்னவோ ராகுலின் யாத் திரை பாஜகவுக்கு அச்சமூட்டாமல் இல்லை. ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்காக காங்கிரஸ் அமல் படுத்த முயன்ற ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை பாஜக கிடப்பில் போட்டிருந்தது.

இது தொடர்பாக ஹரியாணா வின் மேவாட்டில் டிசம்பர் 21-ல் ராகுலை முன்னாள் ராணுவ வீரர் கள் சங்கத்தினர் சந்தித்து பேசினர். இதன் பலனாக, ராகுல் டெல்லி வந்துசேரும் ஒருநாள் முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை அந்த திட்டத்திற்கு பச்சை கொடி காட்டியுள்ளது. ராணுவ வீரர்களுக்கான புத்தாண்டு பரிசான இந்த ஒப்புதலுக்கு ராகுலின் யாத்திரை காரணம் என்ற பேச்சும் உள்ளது.

மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் கரோனா பரவலை முன்வைத்து ராகுலை கடுமையாக விமர்சித்தனர். கரோனா விதிகளை பின்பற்ற முடியாவிட்டால் பாதயாத்திரையை நிறுத்திக் கொள்ளும்படி மத்திய சுகாதார அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதை பொருட்படுத்தாத ராகுல், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் கடிதம் எழுதினார். அதில், ஒரு இந்தியனாக தனது யாத்திரையில் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்று கமல் உள்ளிட்ட பலரும் தலைநகரில் கூடினர். திமுக துணை பொதுச் செயலாளரான கனிமொழி எம்.பி.யும் ராகுலுடன் யாத்திரையில் நேற்று நடந்து சென்றார்.

இதுவரை தமிழ்நாடு முதல் டெல்லி வரை சுமார் 50 மாவட்டங் களை யாத்திரை கடந்துள்ளது. ஆண்டு இறுதியை முன்னிட்டு ராகுல் யாத்திரை நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் 9 நாள் இடைவெளிக்கு பிறகு டெல்லியில் ஜனவரி 3-ல் மீண்டும் யாத்திரை தொடங்குகிறது. பஞ்சாப் வழியாக ஜம்மு-காஷ்மீரின் நகர் சென்று ஜனவரி 26-ல் நிறைவடைய உள்ளது.

புதிய யாத்திரை: தொடர் தோல்விகளுக்கு இடையே இமாச்சல பிரதேச பேரவை தேர்தல் வெற்றியால் காங்கிரஸ் சிறிது உற்சாகம் பெற்றுள்ளது. ராகுலின் யாத்திரை முடிந்த பிறகு ‘கையோடு கைகளை கோருங்கள்’ எனும் பெயரில் புதிய யாத்திரையை காங்கிரஸ் தொடங்க உள்ளது. கட்சித் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள். இதற்கான பலன் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைக்காவிட்டாலும் அக்கட்சி, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தத் தயாராகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x