Last Updated : 23 Dec, 2022 08:15 PM

1  

Published : 23 Dec 2022 08:15 PM
Last Updated : 23 Dec 2022 08:15 PM

பாஜக ஆளும் மாநிலங்களில் 16 பேரின் வாராக் கடன் ரூ.2.4 லட்சம் கோடி: மக்களவையில் செந்தில்குமார் எம்.பி குற்றச்சாட்டு

திமுக எம்பி செந்தில்குமார் | கோப்புப்படம்

புதுடெல்லி: “வங்கிகளின் வாராக் கடன் ரூ.2.4 லட்சம் கோடி எனத் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்தையும் பெற்று செலுத்தாதவர்களின் எண்ணிக்கை வெறும் 16 பேர் மட்டுமே. இவர்கள் அனைவருமே பாஜக ஆளும் மாநிலங்களில்தான் உள்ளனர்” என்று மக்களவையில் திமுக எம்.பி செந்தில்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது: "நிதி அமைச்சகம் மூன்று முக்கிய விஷயங்களில் மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. அதில், முதலாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மக்களே. கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த நடவடிக்கைக்குப் பிறகு அரசே ரூ.2,000 நோட்டை அச்சடித்து வெளியிட்டது.

இதற்காக தொழில்நுட்ப ரீதியில் ஏடிஎம்களில் மாறுதல் செய்ய வேண்டியிருந்தது. பிறகு படிப்படியாக ரூ.2,000 நோட்டை திரும்பப் பெறுவதாகக் கூறப்பட்டது. இப்போது எந்த ஒரு வங்கி ஏடிஎம்-மிலும் ரூ.2,000 நோட்டு வருவதில்லையே? இரண்டாயிரம் ரூபாய் நோட்டை புழக்கத்திலிருந்து நீக்கிவிட்டு புதிதாக 500 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு அச்சிடப்பட்டன என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும்.

அடுத்ததாக, வங்கிகளின் வாராக் கடன் தொகையில் வாராக் கடனாக ரூ.2.4 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்தையும் பெற்று செலுத்தாதவர்களின் எண்ணிக்கை வெறும் 16 பேர் மட்டுமே. இவர்கள் அனைவருமே பாஜக ஆளும் மாநிலங்களில்தான் உள்ளனர். அவர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற அரசு எத்தகைய நடவடிக்கையை எடுத்தது?

மூன்றாவதாக, ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் மூலம் திறந்த வெளிக் கழிப்பிடத்தை ஒழிப்பதற்காக வீடுகளில் கழிப்பறை கட்டிக் கொள்ள ரூ.10 ஆயிரம் வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது. தற்போது அந்தத் தொகை ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளபடியே இது சிறந்த திட்டம். ஆனால், ரூ.10 ஆயிரம் அல்லது ரூ.12 ஆயிரத்தில் இயங்கும் நிலையிலான ஒரு கழிப்பறையைக் கட்டவே முடியாது. இதுவரை 10.9 கோடி கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 55 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் செலவிடப்பட்ட தொகை ரூ. 66,000 கோடி.

இந்தியா முழுமைக்கும் செலவிடப்பட்ட தொகை ரூ. 1,30,800 கோடி. நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட திட்டம் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் வீணாகும் வாய்ப்பு உள்ளது. எனவே இதற்கு நிதியை அதிகரிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

தர்மபுரி - மொரப்பூர் ரயில்பாதைக்கு மாற்று வழித்தடம்: தர்மபுரி - மொரப்பூர் அகல ரயில்பாதைக்கு மாற்று வழித்தடத்தை ஆராய்வது தொடர்பாக தர்மபுரி எம்பியான டாக்டர்.செந்தில்குமார், மத்திய ரயில்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: தர்மபுரி மக்களின் நீண்ட கால கோரிக்கையான தர்மபுரி-மொரப்பூர் அகல ரயில் பாதைத் திட்டம் ரூ. 358.95 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

இது, வரவேற்கத்தக்க அம்சம் ஆகும். 30 கி.மீ. தொலைவில் இந்தப் பாதை அமைப்பதில் தமிழக அரசு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. இதற்கான நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பாராட்டுவதோடு நன்றி தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த ரயில் பாதை அமையும் வழித்தடம் குறித்து ஆய்வுசெய்தபோது ரெட்டிஹள்ளி மற்றும் மூக்கனூர் கிராமம் வழியாக இந்த பாதை போடப்பட உள்ளது. ஆனால் இந்தப் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் விவசாயக் கூலித் தொழிலாளிகளின் குடியிருப்புகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

சாதாரண குடிசை வீடுகளில் வாழும் இந்த மக்களின் வீடுகளுக்கு அருகே ரயில் பாதை அமைந்தால் தங்கள் வீடு இடிந்துவிடும் என்றும் இந்த கிராமத்தை காலி செய்ய வேண்டியதுதான் என இப்பகுதி மக்கள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தனர். எனவே, இவ்விரு கிராமத்தை தவிர்த்து மாற்று பாதையில் வழித்தடத்தை அமைக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் கோபுரம் அமைக்க வலியுறுத்தல்: தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் தொலைத்தொடர்பு இணைப்பு கிடைப்பதில்லை. குறிப்பாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) சேவை இங்கு இடையூறின்றி கிடைப்பதில்லை.

எனவே, இப்பகுதியில் பிஎஸ்என்எல் கோபுரம் அமைக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொலைத் தொடர்புத் துறையை கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

பிக்கனஹள்ளி, ஜித்தண்டஹள்ளி கிராமம், அண்ணாமலைஹள்ளி கிராமம்(முருங்கன்குட்டை), ஜக்க சமுத்திரம் கிராமம், பெரும்பாளை, சித்திரப்பட்டி, எறியூர் வட்டம், வாச்சாத்தி, தோள்தூக்கி, சேளூர் கிராமம், அவளூர் ஆகிய கிராமங்களில் பிஎஸ்என்எல் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் திமுக உறுப்பினர் செந்தில்குமார், மத்திய அமைச்சர் வைஷ்ணவிடம் வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x