Published : 23 Dec 2022 07:33 PM
Last Updated : 23 Dec 2022 07:33 PM

தேர்தல் வியூகங்கள் - காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர்களுடன் கார்கே ஆலோசனை

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 4 மாநில தேர்தல்களில் வெற்றியை ஈட்டுவது குறித்தும், அதற்கு அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டது.

கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கிறது. இந்த 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் வலுவாக இருப்பதால், சட்டப்பேரவைத் தேர்தலை முழு வீச்சில் எதிர்கொள்ள அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஆலோசிப்பதற்காக கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் புதுடெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல், கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கட்சியின் பிற பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தற்போது ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை வரும் ஜனவரி 26-ம் தேதியோடு முடிவடைய இருக்கிறது. இதையடுத்து, அடுத்த 2 ஆண்டு மாதங்களுக்கு மாபெரும் பிரச்சார இயக்கத்தை முன்னெடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ராகுல் காந்தியின் யாத்திரை செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் இந்த பிரச்சார இயக்கம் இருக்கும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சார இயக்கத்தின்போது கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பாதயாத்திரையாகச் சென்று பொதுமக்களை சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டமிடல்களைக் குறித்து இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ரீதியில் மிக முக்கியமானவை என்றும், இவ்விரு ஆண்டுகளிலும் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து தியாகங்களையும் மேற்கொள்ள தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x