Last Updated : 21 Dec, 2022 10:33 PM

 

Published : 21 Dec 2022 10:33 PM
Last Updated : 21 Dec 2022 10:33 PM

டெல்லி ஜேஎன்யுவில் இந்திய மொழிகள் வாரம்: ஆளுநர் தமிழிசை, பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிறப்புரை

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் (ஜேஎன்யு) இந்திய மொழிகள் வாரம் கொண்டாடப்பட்டது. இதில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை மற்றும் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைகழகங்களின் பல பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

ஜேஎன்யுவில் பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் பாரம்பரிய மற்றும் இந்திய மொழிகள் வாரம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முதல்நாள் பாரதியார் நாளாகவும், இரண்டாம் நாள் காரைக்கால் அம்மையார் நாளாகவும், மூன்றாம் நாள் இந்திய மொழிகள் நாளாகவும், நான்காம் நாள் திருவள்ளுவர் நாளாகவும் கொண்டாடப்பட்டன.

அதில் ஜேஎன்யு துணைவேந்தர் சாந்திஶ்ரீ பண்டிட் தலைமையுரையாற்றினார். இவர், "இந்தியர் ஒவ்வொருவரும் ஏதேனும் மூன்று மொழிகளையாவது கற்கவேண்டும்" என கூறினார். மேலும், இந்தி, உருது, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள் எனக் கூறியவர் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டின் சிறப்புகளை விவரித்து பேசினார்.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தான் முனைப்புடன் உள்ளதாகவும் அதையொட்டி அனைத்து இந்திய மொழிகளுக்கும் தனி மையங்களும் இந்திய மொழிகளின் பள்ளியும் புதிதாக உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழ் மையத்திற்கான நிதியாக 10 கோடி வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். முதல் நாள் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழக இந்தித்துறை பேராசிரியர் லட்சுமி பங்கேற்றார்.

பாரதியாரின் பாடலில் தேசிய கருத்துகள் எனும் தலைப்பில் எழுத்தாளர் தேன்மொழி, கம்பராமாயணத்தயும் களக்காடு கோவில் இராமாயண ஓவியங்களையும் முன்வைத்து உரையாற்றினார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், "அனைவரும் தங்கள் தாய்மொழியைத் தவிர்த்த மற்ற இந்திய மொழிகளைக் கற்க வேண்டும். இந்தி மாணவர்களும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம், தமிழ் மாணவர்களும் இந்தி கற்றுகொள்ள வேண்டும். அப்போதுதான் நம் பெருமைகளை அவர்களுக்கு கொண்டுசேர்க்க முடியும்’’ எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய புதுச்சேரி அவைத்தலைவர் எம்பலம் செல்வம் காரைக்கால் அம்மையாரின் சிறப்புகளை எடுத்துரைத்தார். இரண்டாம் நாள் மதியம் மு. ராஜேந்திரன்.ஐஏஎஸ், சுதந்திர போரில் தென்னிந்திய கூட்டமைப்பு எனும் தலைப்பில் உரையாற்றினார்.

தஞ்சை பல்கலைகழக தொல்லியல் துறை பேராசிரியர் வி.செல்வகுமார் பண்டைய தமிழகத்தின் நீர்வழி வணிகம் எனும் தலைப்பிலும் உரையாற்றினார். இந்திய மொழிகள் நாளாக கொண்டாடப்பட்ட மூன்றாம் நாளில் இந்திய கலாச்சார வளர்ச்சியில் எனது மொழியின் பங்கு எனும் தலைப்பில் சம்ஸ்கிருதம், இந்தி, உருது, ஒடியா, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைச் சார்ந்த பேராசிரியர்கள் உரையாற்றினார்கள்.

இவர்கள், தங்கள் தாய்மொழியின் சிறப்புகளை எடுத்துரைத்தார்கள். அசாமிய முதலமைச்சருக்கு கல்வி ஆலோசகரான நானி கோபால் மகந்தா அசாம் மொழியின் வரலாற்றையும் சிறப்புகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.

குறிப்பாக அசாம் மொழியின் பன்மைத்தன்மைகளை விரிவாக எடுத்துரைத்தார். விரைவில் அமையவுள்ள இந்திய மொழிகள் பள்ளியில் அசாமிய மையம் அமைப்பதற்கான நிதியையும் வழங்கினார். சாகித்ய அகாதெமியின் செயலாளர் சீனிவாசராவ் பல மொழிகளை உள்ளடக்கிய இந்தியாவின் பெருமைகளைச் சுட்டிக்காட்டினார்.

திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்பட்ட நான்காம் நாளில் மத்திய வெளியுறத்துறையின் அதிகாரியான ஶ்ரீதரன் மதுசூதனன், திருக்குறளையும் தமிழ் பழமொழிகள் சிலவற்றையும் சுட்டிக்காட்டி வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்தி உரையாற்றிய சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் மாலன் 'தொட்டணைத் தூறும் மணற்கேணி' எனும் தலைப்பில் சில திருக்குறட்களை சுட்டிக்காட்டி விளக்கியதோடு காந்தியடிகள் திருக்குறள் குறித்தும் தமிழ்மொழி குறித்தும் கூறியவற்றை குறிப்பிட்டார்.

இந்நிகழ்வுகளில் புலமுதன்மையர் மசர் ஆசிப், துறைத்தலைவர் ஓம் பிரகாஷ் சிங், தமிழ்த்துறைப் பேராசிரியர்களான அறவேந்தன், சந்திரசேகரன், இந்தித்துறை பேராசிரியர் பூனம் குமாரி மற்றும் பிற மொழித்துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

இறுதிநாள் நிகழ்வில் ஜேஎன்யு தமிழ்ப்பிரிவு மாணவர்கள் பதிப்பித்த, மொழிபெயர்த்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x