Published : 21 Dec 2022 04:55 PM
Last Updated : 21 Dec 2022 04:55 PM

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள்: மாநில அரசுகள் மீது அமித் ஷா கடும் அதிருப்தி

அமித் ஷா | கோப்புப் படம்

புதுடெல்லி: போதைப்பொருள் கடத்தலில் கிடைக்கும் பணம், பயங்கரவாதத்தைத் தூண்டவே பயன்படுத்தப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று பேசிய அமைச்சர் அமித் ஷா, "நாட்டில் போதைப்பொருள் பிரச்சினை கவலைக்குரியதாக உள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பயங்கரவாதத்தை வளர்க்கின்றனர். நம் தேசத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மாநிலங்கள்தான் போதைப்பொருள் விற்பனையையும் ஊக்குவிக்கிறது. அதேபோல் எந்தெந்த மாநிலங்கள் மத்திய அமைப்புகளுக்கு உதவவில்லையோ அவையும் போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிக்கின்றன.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க என்சிபி-யுடன் தேசியப் புலனாய்வு முகமையும் இணைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கிறது. அரசு போதைப்பொருள் தடுப்புக் கொள்கையில் தீவிரமாக உள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டியது அவசியம். ஆனால், போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு கருணையே கூடாது.

இந்தியா முழுவதும் போதைப்பொருள் மாஃபியாக்கள் இயங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. கிரிமினல்கள் எத்தகைய பலத்துடன் இருந்தாலும் சரி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறையில் இருப்பார்கள். எல்லைகள் பாதுகாப்பு மத்திய அரசிடம் உள்ள பொறுப்பு. ஆனால், போதைப்பொருள் கடத்தல் தடுப்பில் எல்லை பாதுகாப்புப் படையினர் சுதந்திரமாக இயங்க முடியாமல் மாநிலங்கள் கெடுபிடி காட்டுகின்றன. எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு வழக்குப் பதிவு செய்ய எவ்வித அனுமதியும் மாநிலங்கள் வழங்குவதில்லை. இவ்வாறாக அரசியல் செய்வது போதைப்பொருள் கடத்தலையே ஊக்குவிக்கும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x