Published : 21 Dec 2022 02:01 PM
Last Updated : 21 Dec 2022 02:01 PM

சீனாவைப் போல கர்நாடக எல்லைக்குள் நுழைவோம்: சஞ்சய் ராவத் எச்சரிக்கை

சஞ்சய் ராவத் | கோப்புப்படம்

மும்பை: "இந்தியாவிற்குள் சீனா நுழைந்ததைப் போல நாங்கள் கர்நாடக எல்லைக்குள் நுழைவோம்" என்று உத்தவ் தாக்கரே அணி சிவசேனா தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ராவத் தெரிவித்தார். கர்நாடகா - மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினை நிலவி வரும் நிலையில், அவரது கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், "இந்தியாவுக்குள் சீனா நுழைந்ததைப் போல நாங்களும் கர்நாடகாவுக்குள் நுழைவோம். அதற்கு எங்களுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. நாங்கள் இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கவே விரும்பினோம். ஆனால், கர்நாடக முதல்வர் நெருப்பை பற்றவைத்துள்ளார். மகாராஷ்டிராவில் பலவீனமான அரசாங்கம் உள்ளது. இதுகுறித்து அவர்களால் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை. இந்தியா ஒரே நாடு. இந்தப் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே நினைக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இரு மாநில எல்லைப் பிரச்சினை குறித்து கர்நாடகா சட்டப்பேரவையின் இரண்டு அவைகளிலும் இன்று தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ரஞ்சய் ராவத்தின் இந்தக் கருத்து கவனத்தைப் பெற்றுள்ளது. ஒருவேளை தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கும், அதேபோல மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திற்கும் அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மகாராஷ்டிரா - கர்நாடகா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. கர்நாடகாவின் சில பகுதிகளை மகாராஷ்டிரா உரிமை கோரி வருகிறது. இதற்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த விவகாரம் மீண்டும் எழுந்த நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் கர்நாடக பகுதிக்குள் செல்லப் போவதாக அறிவித்தனர். இதற்கு அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், இரு மாநில எல்லை பிரச்சினை தொடர்பாக கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மையும், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கடந்த வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அமைதி காக்குமாறு இரு மாநில முதல்வர்களையும் உள்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

அந்தச் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர், "பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. சட்டத்திற்கு உட்பட்டு ஒரு தீர்மானத்திற்கு வர இரு மாநில முதல்வர்களும் செயல்படுவார்கள்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x