Published : 21 Dec 2022 02:59 PM
Last Updated : 21 Dec 2022 02:59 PM

“கரோனாவை எதிர்கொள்ள இந்தியர்களிடம் போதுமான எதிர்ப்பு சக்தி உள்ளது” - எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர்

எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா

புதுடெல்லி: கரோனாவை எதிர்கொள்ள இந்தியர்களின் எதிர்ப்பு சக்தி போதுமானதாக உள்ளது என்று எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.

சீனாவில் மீண்டும் கரோனா வேகமெடுக்கிறது. உயிர் பலிகளும் பதிவாகிறது. 2019 டிசம்பர் சீனாவின் வூஹான் நகரில் தான் கரோனா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்நிலையில், 2022 டிசம்பரில் சீனாவில் மீண்டும் கரோனா வேகமெடுப்பதால் உலக நாடுகள் தத்தம் சுகாதாரத் துறைகளுக்கு எச்சரிக்கை மணி அடித்து வருகின்றன. இந்தச் சூழல் குறித்தும், இதனை எதிர்கொள்வது குறித்தும் ஒரு பேட்டியில் முக்கிய தகவல்களை எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா வெளியிட்டுள்ளார்.

அந்தப் பேட்டியில், "முன்பு சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் கரோனா பெருந்தொற்று வேகத்தைக் கண்டு நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதில் ஒன்றுதான் ஆரம்பகாலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு. அப்போது பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. இது மிகவும் முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், அரசு தரப்பினருக்கு இடையே ஒருமித்த செயல்பாடு உண்டானது. அதனால், கரோனாவை எதிர்கொள்ள நம்மால் ஆயத்தமாக முடிந்தது. நோயாளிகளைக் கையாள தேவையான உட்கட்டமைப்புகளை நாம் இந்த காலக்கட்டத்தை பயன்படுத்திக் கொண்டோம். விளைவு, அடுத்த அலை வந்தபோது மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பாதிப்பு குறைவு.

முதன்முதலில் கரோனா பெருந்தொற்று நம்மை தாக்கியபோது கரோனா வைரஸுக்கு எதிராக நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லை. இதனால் மக்களுக்கு கடுமையான தொற்றுகள் ஏற்பட்டன. ஆனால், இப்போது பெருந்தொற்று ஏற்பட்டு 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், மக்களுக்கு இயற்கையாகவே தொற்றை எதிர்க்கும் பலம் கிடைத்துள்ளது. இங்கே பலருக்கும் பலமுறை தொற்று ஏற்பட்டுவிட்டது. அதுபோல் நம் நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கையும் மிகமிக அதிகம். இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி கரோனா வைரஸை எதிர்கொள்ளத்தக்கது. அதனால், கரோனா வைரஸ் நம்மை மிக மோசமாக பாதிக்காத அளவிற்கு நம்மால் அதை எதிர்கொள்ள முடியும்.

கடந்த காலங்களில் நாம் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா போன்ற திரிபுகளை எதிர்கொண்டோம். ஆனால் கடந்த ஓராண்டாக ஓமிக்ரான் மற்றும் அதன் வகையறா திரிபு தான் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. புதிய திரிபு ஏதும் உருவாகவில்லை. இருப்பினும் நாம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். வைரஸ் கிருமி எப்போது எப்படி செயல்படும் என்று வரையறுத்து வைக்க முடியாது. இப்போதைக்கு கரோனா வைரஸ் ஒரு நிலைத்தன்மையுடன் சற்றே வீரியம் குறைந்ததாக இருக்கிறது. ஆனால், நாம் உயிரிழப்புகள். மருத்துவமனைகளில் அனுமதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கையை கவனிக்க வேண்டும். கரோனாவுக்குப் பின்னர் மருத்துவத் துறை ஒரு புரட்சியை சந்தித்துள்ளது. அதனால் நாம் மருத்துவர்களை அதற்கேற்ப தயார்படுத்த வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x