Last Updated : 07 Nov, 2022 07:46 AM

 

Published : 07 Nov 2022 07:46 AM
Last Updated : 07 Nov 2022 07:46 AM

பாஜக ஆளும் மாநிலங்களில் அமல்படுத்திய பின்னர் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர திட்டம்

கோப்புப்படம்

புதுடெல்லி: முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தனிச் சட்டங்களை மாற்றி,அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த பாஜக கொள்கை முடிவு எடுத்துள்ளது. ஒவ்வொரு மக்களவை தேர்தல் அறிக்கையிலும் பாஜக இதை குறிப்பிட்டு வருகிறது. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக பொது சிவில் சட்டம் பற்றி பேசுவதாக பாஜக மீது புகார்கள் உள்ளன. எனினும், பாஜக ஆளும் மாநிலங்களில் முதல் கட்டமாக படிப்படியாக அமல்படுத்தவும், அது மக்களிடம் பெறும் வரவேற்பை பொறுத்து நாடு முழுவதும் அமல்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சட்டப்பேரவை தேர்தல்களுக்கு சற்று முன்பு உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. உத்தராகண்டில் ஆய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது. பாஜக ஆளும் உத்தர பிரதேசத்திலும் இதே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தனிச் சட்டங்களை சீர்திருத்துவது தொடர்பான கருத்துகளை தெரிவிக்க நாடாளுமன்ற மாநிலங்களவை சட்டத் துறை நிலைக் குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பாஜக மூத்த தலைவர்கள் கூறும்போது, ‘‘மூன்று முக்கிய வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்த போது, விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் அவற்றை வாபஸ் பெற வேண்டி வந்தது. இந்த நிலை, பொது சிவில் சட்டத்தில் வராமலிருக்க, பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் அமல்படுத்திய பின்னர் தேசிய அளவில் சட்டம் கொண்டுவர முயற்சிப்போம். இதனால், தனிச்சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படும் முஸ்லிம் பெண்கள் வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும்’’ என்று தெரிவித்தனர்.

முத்தலாக் தடை சட்டம்

இதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் சட்டத்தை மத்தியில் உள்ள பாஜக அரசு கடந்த 2017-ல் கொண்டு வந்தது. இதன் பலன் 2019 உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்தது. உ.பி. முஸ்லிம் பெண்கள், பாஜகவுக்கு வாக்களித்தனர். இதேபோல் தனிச் சட்டத்திலும் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையின பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகப் புகார்உள்ளது. எனவே, இவர்களது வாக்குகளுக்காக, பாஜக 2024 மக்களவை தேர்தலை குறி வைத்து பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சிக்கிறது.

தமிழக குழுவுக்கு எதிர்ப்பு

பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்துகள் அறிவது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை சட்டத் துறை நிலைக் குழு அளித்த அறிவிப்பின் அடிப்படையில், தமிழக அரசு ஒரு குழு அமைத்துள்ளது. இதற்கு தமிழக முஸ்லிம் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இக்குழு பொது சிவில் சட்டத்தை வரவேற்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி அதை கலைக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எஸ்டிபிஐ, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும் கடிதங்கள் அனுப்பியுள்ளன.

தமுமுக தீர்மானம்

இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொதுக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘‘மாநிலங்களவை சட்டத்துறை நிலைக் குழு அறிவிப்பின் அடிப்படையிலேயே திராவிட மாடலான திமுக அரசு நிராகரித்திருக்க வேண்டும். தனியார் சட்டங்களின் மீது தமிழக அரசு அமைத்தகுழுவை மாற்றி நிபுணத்துவம் கொண்ட முஸ்லிம்களால் குழு அமைக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும் தேசிய அளவில் ஒரு கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க திட்டமிட்டுள்ளது.

ஆனால், திமுக கூட்டணியில் உள்ள தமுமுகவின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சி மவுனம் சாதிப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x