Published : 01 Feb 2022 06:08 AM
Last Updated : 01 Feb 2022 06:08 AM

மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்; 2022-23 நிதி ஆண்டில் 8.5% வளர்ச்சி: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

பட்ஜெட்டுக்கு முந்தைய புகைப்பட நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் (இடமிருந்து-நிற்பவர்கள்) வருவாய்த்துறை செயலர் தருண் பஜாஜ், தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் மற்றும் நிதித்துறை செயலர் டி.வி. சோமநாதன்.- படம்: பிடிஐ

புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சி விகிதம் வரும் நிதி ஆண்டில் 8 முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்துவரும் நிதி ஆண்டில் இதைவிட குறைவான வளர்ச்சியே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் டாக தாக்கல் செய்யப்படுகிறது.

வழக்கமாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல்நாள் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன்படி, பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்ப தாவது:

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 9.2 சதவீதம் இருக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) கணித்துள்ளது. அதேநேரத்தில் வரும் நிதி ஆண்டில் (2022-23) நாட்டின் வளர்ச்சி அதைவிடக் குறைவாக 8 முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டதால் 9.2 சதவீத வளர்ச்சியை நடப்பு நிதி ஆண்டில் எட்ட முடியும். ஆனால், கரோனா பெருந்தொற்று இரண்டாவது அலையின் தீவிரத்தால் ஏற்பட்ட பாதிப்பு என்பது, வரும் நிதி ஆண்டில் எதிரொலிக்கும். நாட்டில் கரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள் ளன. இதன்காரணமாக நீண்டகால நன்மைகள் ஏற்படலாம்.

ஒமைக்ரான் வைரஸ் பரவலால் பல நாடுகளில் பணவீக்கம் அதிகரித்தது. இதனால் பணப்புழக்கமும் குறைந்தது. ஆனால், இந்தியாவில் அத்தகைய சூழல் உருவாகவில்லை. இதற்கு இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மை முக்கிய காரணமாக உள்ளது. மேலும், இதுபோன்ற அசாதாரண சூழலை எதிர்கொள்ளும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதும் ரொக்க கையிருப்பு வைத்திருந் ததும்கூட காரணமாக அமைந் துள்ளன.

கரோனா பெருந்தொற்று காரணமாக வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகள் மட்டும் மிகக் குறைந்த அளவிலான பாதிப்பை எதிர்கொண்டன. 2021-22 நிதி ஆண்டில் இத்துறை 3.9 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய நிதி ஆண்டில் இத்துறை 3.6 சதவீத வளர்ச்சியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

பெருந்தொற்று காலத்தில் சேவைத் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட சேவைத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இத்துறை நடப்பு நிதி ஆண்டில் 8.2 சதவீத வளர்ச்சியை எட்டக்கூடும். முந்தைய நிதி ஆண்டில் இத்துறை மைனஸ் 8.4 சதவீத சரிவை சந்தித்தது.

ஒட்டுமொத்த நுகர்வு 2021-22 நிதி ஆண்டில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அரசின் தாராள செலவும் முக்கிய காரணமாகும். 2020-21 நிதி ஆண்டில் 6 முதல் 6.5 சதவீத வளர்ச்சி எட்டும் என கணிக்கப்பட்டது. ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக அந்த நிதி ஆண்டில் வளர்ச்சி மைனஸ் 7.3 சதவீதமாக சரிந்தது.

உலகின் பிற நாடுகளுடன் ஒப் பிடும்போது, இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்டும் நாடாக உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போட்டது, விநியோக சங்கிலியில் சீர்திருத்தங் கள் கொண்டு வந்தது, கட்டுப்பாடுகளை நீக்கியது, ஏற்றுமதி அதிகரிப்பு, மூலதன செலவினங்களை அதிகரிக்க போதிய நிதி ஆதார வசதி ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களால் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் இரண் டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கரோனா, டெல்டா வைரஸ், ஒமைக்ரான் தொற்றுகளால் பாதிக்கப்பட்ட நிலையில் நுகர்வு, நுகர்வோர் நடவடிக்கை, விநியோக சங்கிலி ஆகியனவும் பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா காரணமாக ஆன்லைன் தொழில்நுட்பங்களை நோக்கி நகர வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x