Last Updated : 29 Mar, 2016 12:45 PM

 

Published : 29 Mar 2016 12:45 PM
Last Updated : 29 Mar 2016 12:45 PM

பாரத மாதா என்ற கருத்தாக்கம் ஐரோப்பிய இறக்குமதி: வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப்

'பாரத்' என்ற வார்த்தை காரவேலர் ஆட்சி காலத்து கல்வெட்டில்தான் முதன்முறையாக பிராக்ரித் மொழியில் இடம்பெற்றது.

'பாரத மாதா'என்ற கருத்தாக்கமே ஐரோப்பிய இறக்குமதி என பிரபல வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபிப் கூறியிருக்கிறார். பண்டைய கால இந்தியாவிலும், இடைக்கால இந்திய வரலாற்றிலும் இப்படி ஒரு கருத்தாக்கம் இருக்கவேயில்லை.

இது முழுக்க முழுக்க ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருத்தாக்கம். ஐரோப்பிய நாடுகளில்தான் தாய் நாடு, தந்தை நாடு என்ற கருத்து சிந்தனை உருவானது என பேராசிரியர் ஹபிப் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் கூறினார்.

பின்னர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "பாரத் என்ற வார்த்தை காரவேலர் ஆட்சி காலத்து கல்வெட்டில்தான் முதன்முறையாக பிராக்ரித் மொழியில் இடம்பெற்றது. ஆனால் நம் தேசத்துக்கு மனித வடிவம் வழங்கும் வகையில் அன்னை தேசம், தந்தை தேசம் என்று அழைக்கும் பழக்கம் பண்டைய கால இந்திய வரலாற்றிலும், இடைக்கால இந்திய வரலாற்றிலும் இடம் பெறவில்லை. ஐரோப்பிய நாடுகளில் தேசியவாத கொள்கைகள் உருவான போதே நாடுகளை அன்னை தேசம், தந்தை தேசம் என அழைக்கும் பழக்கம் உருவானது. மேலும் உருது மொழியில் மதர் - இ - வதான என்று அழைக்கப்படுவதும் ஐரோப்பிய கருத்தாக்கமே" என்றார்.

இந்திய தாய் நாட்டை புகழ்ந்து பாரத மாதாவுக்கு ஜே என முழக்கமிடும் பழக்கத்தை இன்றைய இளைஞர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால், அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தியாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியைச் சேர்ந்த எம்பி அசாதுதிதீன் ஒவைசி, 'பாரத் மாதாவுக்கு ஜே' என்று முழங்க மாட்டேன் என்று பேட்டியளித்தார். இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாரத மாதாவுக்கு ஜே சொல்ல முடியாது என்று கூறிய மகாராஷ்டிர எம்எல்ஏ வரிஸ் பதானை சட்டப்பேரவை சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில், பாரத மாதாவுக்கு ஜே என்று முழக்கமிடாதவர்களின் குடியுரிமை, வாக்குரிமையை பறிக்க வேண்டும்என்று சிவசேனா கட்சி காட்டமாக கூறியது.

இப்படி 'பாரத மாதாவுக்கு ஜே' என்ற கோஷம் சமீப காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சூழலில் பேராசிரியர் ஹபீபின் கருத்து அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x