Last Updated : 08 Nov, 2015 09:16 AM

 

Published : 08 Nov 2015 09:16 AM
Last Updated : 08 Nov 2015 09:16 AM

ஆட்சியை பிடிக்கப் போவது யார்? - பிஹாரில் இன்று வாக்கு எண்ணிக்கை: மாலைக்குள் முடிவு வெளியாகும்

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. ஆட்சியை பிடிக்கப் போவது எந்தக் கூட்டணி என்று மாலைக்குள் தெரிந்து விடும். இதனால் பரபரப்பு நிலவுகிறது.

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்றது. அக்டோபர் 12, 16, 28, நவம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடந்தது. பிஹார் வரலாற்றில் இல்லாத வகையில், இந்தத் தேர்தலில் 56.80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தம் 6.68 கோடி வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.

இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியாக களம் இறங்கின. எதிர் தரப்பில் பாஜக தலைமையில் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன. இவ்விரு அணிகள் இடையில் மட்டுமே நேரடிப் போட்டி நிலவுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் நிதிஷ்குமாரும் காரசாரமாக பேசினர். ஒருவர் மீது ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டுகளை எழுப்பியதால் பிரச்சாரத்தில் அனல் பறந்தது. பாஜக கூட்டணியை ஆதரித்து 30 பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் செய்தார். அதேபோல் பாஜக தலைவர் அமித் ஷா, 85 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று காரசாரமாக பேசினார்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறியதாக 2 கூட்டணிகளின் முக்கிய தலைவர்கள் மீதும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் பாஜக தலைவர் அமித் ஷா, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ஐஜத தலைவர் சரத் யாதவ் ஆகியோரும் அடங்குவர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலும் ஆளும் ஐஜத கூட்டணியும் பாஜக கூட்டணியும் சம அளவில் தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன. ஆனால், ‘டுடேஸ் சாணக்கியா’, என்டிடிவி.க்காக ஹன்சா நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் ஐஜத.வில் இருந்த பிரிந்து பாஜக கூட்டணியில் சேர்ந்த ஜிதன்ராம் மாஞ்சி 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். லாலு பிரசாத் தனது 2 மகன்களை களம் இறக்கி உள்ளார்.

பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், சகிப்பின்மை தொடர்பாக நாடாளு மன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க் கட்சிகளின் தாக்குதல்களை அடக்க சரியாக இருக்கும் என்று பாஜக.வினர் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

அதேநேரத்தில் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால், எதிர்க்கட்சிகளின் தாக்குதல் மேலும் பலமாக இருக்கும் என்று தெரிகிறது.

அதேபோல் தேர்தலில் ஐஜத தலைமையிலான மெகா கூட்டணி தோல்வி அடைந்தால், முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத்துக்கு பலத்த அடியாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இன்று மாலைக்குள் எந்தக் கூட்டணி பிஹாரில் ஆட்சியை பிடிக்கும் என்பது தெரிந்து விடும். அதனால் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி தேசிய அளவில் மக்களும் இம்முடிவுகளை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

தேர்தல் செலவு ரூ.300 கோடி

பிஹார் மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆர்.லட்சுமணன் கூறியதாவது:

பொதுவாக, சட்டப்பேரவைத் தேர்தல் செலவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் மக்களவைத் தேர்தல் செலவை மத்திய அரசும் ஏற்றுக்கொள்ளும். அந்த வகையில் 5 கட்டங்களாக நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இதுவரை இல்லாத வகையில் ரூ.300 கோடி செலவாகி உள்ளது.

இதில் வாகனங்கள், எரிபொருள், வாக்குச்சாவடிகள் அமைப்பது, கூடாரங்கள், தடுப்புகள் அமைத்தல், தேர்தல் ஆவணங்கள் அச்சடிப்பு ஆகியவற்றுக்காக மட்டும் ரூ.152 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த செலவு கடந்த 2010 தேர்தலின் போது ரூ.93 கோடியாக இருந்தது.

அதிகபட்சமாக வாகனங்களுக்கான வாடகையாக ரூ.75 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலின்போது மொத்தம் 89 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தபடியாக, மத்திய படைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ரூ.78 கோடி செலவாகி உள்ளது. இதை மாநில உள்துறை ஏற்கும். இந்த முறை பிஹாரில் முதன்முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிஆர்பிஎப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த முறை தேர்தல் பிரச்சாரம் மிகவும் தரம் தாழ்ந்து இருந்ததுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த முறை மூத்த அரசியல்வாதிகள் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 6 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x