Published : 07 Dec 2020 07:08 AM
Last Updated : 07 Dec 2020 07:08 AM

எங்கள் குழந்தைகளுக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லை- போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வேதனை

புதுடெல்லி

எங்கள் வாழ்க்கைப் போராட் டத்தை பார்த்துவிட்டு எங்கள் குழந்தைகளுக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லை என்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி – எல்லையில் உ.பி.யின் காஜிபூரில் கடந்த 28-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹசீப் அகமது கூறும்போது, “எனது 2 மகன்களுக்கும் விவசாயத்தில் ஆர்வம் இல்லை. படித்து, நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்றே விரும்புகின்றனர். எங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. எங்களின் கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்காததைப் பார்த்து என் குழந்தைகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால் விவசாயி ஆக அவர்களுக்கு விருப்பம் இல்லை” என்றார்.

உ.பி.யின் அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த சீதா ஆர்யா என்ற பெண் விவசாயி கூறும் போது, “எனது குழந்தைகளும் விவசாயத்தில் இருந்து மெல்ல விடுவித்துக் கொள்ளவே விரும்புகின்றனர். வருவாய் ஈட்ட பான்கடை வைப்பதற்கு கூட அவர்கள் தயாராக இருக்கின்றனர். நாங்கள் இரவும் பகலும் வயல்களில் வேலை பார்க்கிறோம். ஆனால் விவசாயத்தில் போதிய லாபம் கிடைப்பதில்லை. இதனால் எங்கள் குழந்தைகள் அதில் ஈடுபட விரும்பவில்லை. விவசாயத்தை ஒரு வேலைவாய்ப்பாக மாற்றுவதில் அரசு கவனம் செலுத்தியிருந்தால், எங்கள் பயிர்களுக்கு நியாயமான விலையை நிர்ணயம் செய்திருந்தால் எங்கள் குழந்தைகள் இந்த தொழிலுக்கு எதிராக மாறியிருக்க மாட்டார்கள்” என்றார்.

உ.பி.யைச் சேர்ந்த தயால் சிங் (65) கூறும்போது, “எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மாதம் 2,000 ரூபாய்க்காக கடைகளில் வேலை பார்க்கக் கூடதயாராக உள்ளனர். விவசாயத்தில் ஈடுபட அவர்கள் விரும்பவில்லை. விவசாயக் கடன் வாங்குவதற்கு தங்கள் குடும்பம் போராடுவதை அவர்கள் பார்க்கின்றனர். விவசாயத்தில் கிடைக்கும் பணத்தில் பெரும் பகுதிகடனை அடைக்கச் சென்று
விடும். குறைந்த தொகையே மிஞ்சும். இந்நிலையில் அவர்கள் எண்ணத்தை நாங்கள் எவ்வாறு மாற்ற முடியும்?” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x