Last Updated : 01 Nov, 2020 03:13 AM

 

Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

‘அலாவுதீனின் அற்புத விளக்கு’ வாங்க உத்தரபிரதேசத்தில் ரூ.2.5 கோடிக்கு விலை பேசி ஏமாந்த மருத்துவர்: மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீஸார்

உ.பி.யில் விற்கப்பட்ட ‘அலாவுதீனின் அற்புத விளக்கு’.

புதுடெல்லி

அரபு நாட்டு கதைகளில் வரும், ‘அலாவுதீனின் அற்புத விளக்கு’ என்று கூறி ரூ.2.5 கோடிக்கு விலை பேசி உத்தர பிரதேசத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதை நம்பி ஏமாந்த மருத்துவர் அளித்த புகாரின் பேரில் இருவர் மீரட் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவீன காலத்தில் நன்கு படித்தவர்களும் ஏமாறும் காலம் தொடர்கிறது. இதில் ஒருவராக உ.பி.யின் மீரட் புறநகரில் வசிக்கும் யுனானி மருத்துவர் லேய்க் அகமது கான் இருந்துள்ளார். இவரை, தம் நோய்வாய்பட்ட தாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டி அனீஸ் கான் எனும் இளைஞர் முதல் முறையாக சந்தித்துள்ளார். இதற்காக அனீஸின்வீட்டுக்கு அடிக்கடி சென்ற மருத்துவருக்கு லேய்க்குடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.தனது வீட்டில் அனீஸ் வைத்திருந்த முகலாயர் காலத்து பல்வேறு பழம் பொருட்களை பார்த்த மருத்துவர் லேய்க் அகமது கான், அவற்றில் தனது விருப்பத்தையும் காட்டியுள்ளார். இதை பயன்படுத்திய அனீஸ்,தனது நண்பர் இக்ராமுத்தீனுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, ‘அலாவுதீனின் அற்புத விளக்கு இருக்கிறது. அதை தேய்த்து பல கோடி சம்பாதிக்கலாம்’ என்று கூறிஆசை காட்டியுள்ளார். அதன்பின்,அற்புத விளக்கை லேய்க் கான் பார்க்க விரும்பினார். உடனடியாக அதை பார்க்க இக்ராமுத்தீன் வீட்டில் அனீஸ் ஏற்பாடு செய்துள்ளார்.

ஏற்கெனவே திட்டமிட்டபடி இருட்டு அறையில் விளக்கை தேய்த்து, பூதம் போல் ஒரு ஆஜானுபாகுவான நபரை திடீரென கண் முன்பாக நிறுத்தி உள்ளனர். இதை பார்த்து நம்பிய மருத்துவர் அலாவுதீனின் அற்புத விளக்கை விலை பேசியுள்ளார். ரூபாய் 5 கோடியில் தொடங்கிய பேரம் 2.5 கோடியில் முடிந்து மருத்துவர் லேய்க்கின் கைக்கு விளக்கு கை மாறி உள்ளது. முன்பணமாக ரூ.51 லட்சம் அளித்த லேய்க் கான், மீதித் தொகைக்கு 6 மாதம் அவகாசம் பெற்றுள்ளார்.

வீட்டில் போய் அலாவுதீனின் அற்புத விளக்கை தேய்த்தவரின் கை தேய்ந்ததே தவிர, எந்தபூதமும் வரவில்லை. தாம் ஏமாந்ததை உணர்ந்த மருத்துவர் லேய்க்அகமது கான், மீரட்டின் பிரம்மபுரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து அனீஸும், இக்ராமுத்தீனையும் மீரட் போலீஸார் கைது செய்துள்ளனர். இக்ராமுத்தீன் வீட்டில் இருட்டறையில் முகலாயர் காலத்து ஆடைகளை அணிந்து பூதமாக வந்து சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பிரம்மபுரி காவல் நிலைய ஆய்வாளர் சுபாஷ் அட்ரி கூறும்போது, ‘‘ஆறு மாத காலத்துக்கு ஒருமுறை தான் விளக்கை தேய்க்க வேண்டும். மீறினால் பூதம் மருத்துவரின் குடும்பத்தினரை அழித்துவிடும் என மிரட்டி உள்ளனர். இதனால், பணம் கொடுத்து விளக்கை பெற்று 6 மாதம் காத்திருந்து விளக்கை தேய்த்து ஏமாந்த லேய்க் கான், லண்டனில் படித்தவர் என்பதை என்னவென்று சொல்ல?’’ என்று தெரிவித்தார்.

ரூ.600க்கு வாங்கிய விளக்கு

உறவினர்களான அனீஸ் மற்றும் இக்ராமுத்தீன் மீது ஐபிசி 420 மோசடி மற்றும் ஐபிசி386 பயமுறுத்தி கொல்ல முயல்வது ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவாகி உள்ளது. மீரட்டின்அருகிலுள்ள முராதாபாத்தில் பித்தளை மற்றும் கலைப்பொருட்கள் பழங்கால முறைப்படி அழகாக செய்யப்படுகின்றன. இங்கிருந்து அலாவுதீனின் பெயரில் இந்த அற்புத விளக்கை குற்றவாளிகள் ரூ.600 விலைக்கு வாங்கியது தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x