Published : 06 Sep 2015 11:39 AM
Last Updated : 06 Sep 2015 11:39 AM

நன்னெறிகளை போதிக்கும் ஆசிரியர்கள் நாட்டுக்கு தேவை: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்

குழந்தைகளுக்கு நன்னெறிகளை போதிக்கும் ஆசிரியர்கள் நாட்டுக்கு தேவை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

ஆசிரியர் தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் 2014-ம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது வழங்கும் விழா டெல்லி விக்யான் பவனில் நேற்று நடைபெற்றது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் 300-க்கும் மேற்பட்டோருக்கு நல்லாசிரியர் விருதினை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

விழாவில் பிரணாப் பேசியதாவது: நாட்டுக்கு முன் எப்போதையும் விட, நமது குழந்தைகளுக்கு சகிப்புத் தன்மை, பன்முகத் தன்மை, கருணை உள்ளிட்ட நன்னெறிகளை போதிக்கும் ஆசிரியர்கள் தற்போது தேவைப்படுகின்றனர்.

உற்சாகத்துடன் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் தனிப்பட்ட லட்சியங்களை சமூக மற்றும் நாட்டின் லட்சியங்களுடன் இணைக்கிறார். இந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவை மட்டும் போதிக்கவில்லை. அவர்களின் மனங்களையும் பண்படுத்து கிறார்.

இந்த ஆசிரியர்கள் வார்த்தைகள், செயல்கள் மூலம் மாணவர்களை ஊக்குவிப்பதுடன், மாணவர்களை அதிக செயல்திறன், உயர் சிந்தனை கொண்டவர்களாக உயர்த்துகின்றனர். நமது நாட்டின் எதிர்காலத்தை கட்டமைக்கும் மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது.

விரைவான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இக்காலகட்டத்தில் தரமாக கல்வி அளிக்க வேண்டியதன் அவசியம் மேலும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு பிரணாப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x