Published : 09 May 2020 06:52 PM
Last Updated : 09 May 2020 06:52 PM

கரோனா நோயாளிகள்; 0.38 சதவீதம் பேருக்கு மட்டுமே வென்டிலேட்டர் உதவியுடன்  சிகிச்சை தேவைப்படுகிறது: ஹர்ஷ வர்த்தன்

கரோனா நோயாளிகளில் 2.41 சதவீதம் பேர் தீவிர சிகிச்சைப் பிரிவு சிகிச்சையிலும், 0.38 சதவீதம் பேர் வென்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சையிலும், 1.88 சதவீதம் பேர் ஆக்சிஜன் செலுத்தும் நிலையிலான சிகிச்சையிலும் உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகலாயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் மாநிலங்களில் உள்ள கோவிட்-19 நோய்த் தடுப்பை எதிர்கொள்ளும் ஆயத்தநிலைகள் குறித்தும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இன்று காணொலி மூலம் ஆய்வு செய்தார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபேவும் இதில் பங்கேற்றார். மிசோரம் மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் லால்தங்லியானா, அருணாச்சலப் பிரதேச சுகாதார அமைச்சர் அலோ லிபாங், அசாம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் பியூஷ் ஹசாரிக்கா, எட்டு மாநிலங்களின் உயரதிகாரிகள் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

நாட்டில் கோவிட்-19 நோய்த் தாக்குதலை எதிர்கொள்வதில் அனைத்து மாநிலங்களும் முனைப்பு காட்டி வருவதை டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் பாராட்டினார். ``பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களில் பசுமை மண்டலங்களைப் பார்ப்பது பெரிய நிம்மதி தருவதாகவும், மிகவும் ஊக்கம் தருவதாகவும் உள்ளது. இன்றைய தேதி நிலவரத்தின்படி அசாம், திரிபுராவில் மட்டுமே கோவிட்-19 பாதிப்புடன் நோயாளிகள் உள்ளனர்.

மற்ற அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் பசுமை மண்டலத்தில் உள்ளன. இப்போது ஆரஞ்சு மண்டலங்களைப் பசுமை மண்டலங்களாக மாற்றி பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்'' என்று அவர் கேட்டுக்கொண்டார்.

2020 மே 9 ஆம் தேதி நிலவரத்தின்படி நாடு முழுக்க 59,662 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது; அதில் 17,847 பேர் குணம் அடைந்துள்ளனர்; 1,981 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் 3,320 பேருக்குப் புதிதாக நோய்த் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது, 1307 பேர் குணம் அடைந்துள்ளனர். மரண விகிதம் 3.3 சதவீதமாகவும், குணம் அடைபவர்கள் விகிதம் 29.9 சதவீதமாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். நேற்றைய நிலவரத்தின்படி, கோவிட் பாதித்துள்ள நோயாளிகளில் 2.41 சதவீதம் பேர் தீவிர சிகிச்சைப் பிரிவு சிகிச்சையிலும், 0.38 சதவீதம் பேர் வென்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சையிலும், 1.88 சதவீதம் பேர் ஆக்சிஜன் செலுத்தும் நிலையிலான சிகிச்சையிலும் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

``நாட்டில் மருத்துவப் பரிசோதனை செய்யும் எண்ணிக்கைகளின் திறன் அதிகரித்துள்ளது. 332 அரசு ஆய்வகங்கள், 121 தனியார் ஆய்வகங்கள் மூலம் ஒரு நாளுக்கு 95 ஆயிரம் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்ய முடியும். ஒட்டுமொத்தமாக இதுவரையில் 15,25,631 கோவிட்-19க்கான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன'' என்று அவர் கூறினார்.

வடகிழக்கு மாநிலங்களுடன் நடந்த விரிவான கலந்துரையாடலின் போது, பரிசோதனை வசதிகள், சுகாதாரக் கட்டமைப்புகள், கண்காணிப்பு, தொடர்புகள் தடமறிதல் குறித்த பல்வேறு அம்சங்களை அவர்கள் விவரித்ததுடன், தங்கள் பகுதியில் கையாளப்படும் சிறந்த நடைமுறைகள் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.

வடகிழக்கில் கோவிட்-19 மேலாண்மையின் சிறப்பான நிலைமையை பராமரிப்பதற்கு, திரும்பி வரக்கூடிய குடிபெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சம், வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி பரிசோதனை நடத்தி, தனிமைப்படுத்தி வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஹர்ஷ் வர்த்தன் கேட்டுக்கொண்டார். நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிகாட்டுதல்கள் திருத்தப் பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், அவற்றை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சர்வதேச எல்லைகளைக் கொண்ட மாநிலங்களில், எல்லைகளில் வெளி நபர்கள் நுழையும் இடங்களில் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மருத்துவப் பரிசோதனைகள் நடத்துதல், தனிமைப்படுத்தி வைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன், கோவிட் அல்லாத சுகாதாரச் சேவைகள் அளிப்பதற்கும் சம அளவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், அவர்களைப் புறக்கணித்துவிடக் கூடாது என்று மாநிலங்களுக்கு அமைச்சர் நினைவுபடுத்தினார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x