Published : 09 May 2020 04:26 PM
Last Updated : 09 May 2020 04:26 PM

100 நாட்களில் சாதனை: கரோனா பாதிப்பைக் குறைத்து வரும் கடவுளின் தேசம்; 16 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்

நாடு முழுவதும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் , மாநில அரசுகளும் திணறி வரும் நிலையில், 100 நாட்களில் கரோனா பாதிப்பை (கரோனா கர்வ்) குறைத்திருக்கிறோம் என்று கேரள அரசு பெருமையுடன் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே முதன்முதலாக கரோனா நோயாளி கேரளாவில்தான் கடந்த ஜனவரி 30-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டார். சீனாவின் வூஹான் நகரிலிருந்து கேரள வந்த மருத்துவ மாணவிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது. அதன்பின் 3 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டாலும், கேரள அரசு அவர்களுக்குத் தரமான சிகிச்சையளித்து வெற்றிகரமாகக் குணப்படுத்தியது.

அதன்பின் இந்தியாவில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவுடன் கேரளாவிலும் வேகமாக கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. காரணம் வெளிநாடுகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வந்ததால் கரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்தது

ஆனால், கல்வியறிவில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள கேரள மாநிலம், மத்திய அரசு லாக்டவுன் அறிவிக்கும்முன்பே மார்ச் மாதமே பொதுமுடக்கத்தைக் கொண்டுவந்தது. மார்ச் 11-ம் தேதி முதல் நோய்த்தொற்று பரவ அதிகமான வாய்ப்புள்ள பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்கம், கேளிக்கை விடுதிகள் என அனைத்தையும் மூடியது.

மேலும் கரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் வெளியே வராமல் இருக்கத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வீடுகளுக்கே கொண்டு சேர்த்தல் போன்றவற்றைச் செய்து மக்களை வெளியே வரவிடாமல் அரசு அதிகாரிகளும், போலீஸாரும் கவனித்துக்கொண்டனர்.

ஏடிஎம் மையத்துக்குக் கூட செல்லவிடாமல் வீட்டுக்கே அஞ்சலக ஊழியர் மூலம் பணம் வரவழைத்தல், ரேஷன் மூலம் மக்களுக்குத் தரமான பொருட்களை போதுமான அளவில் வழங்குதல் போன்றவற்றைச் செய்து மக்களை வெளியேற விடாமல் பார்த்துக்கொண்டது. கரோனாவிலிருந்து மாநிலத்தை மீட்க மாநில அரசு ரூ.20 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து பணிகளைத் தொடங்கியது.

இதனால் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து ஒரு கட்டத்துக்குப் பின் கரோனா நோயாளிகள் புதிதாக வருவதைக் காட்டிலும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

கேரளாவில் அதிகமாக பாதிக்கப்பட்டது காசர்கோடு மாவட்டம்தான. கேரளாவி ல்உருவான கரோனா நோயாளிகளில் 50 சதவீதம் காசர்கோடு மாவட்டத்திலிருந்து வந்தவர்கள். அங்கு கூடுதலான கவனிப்பு, மருத்துவ சிகிச்சையளித்து கரோனாவைக் குறைத்துள்ளது.

மத்திய அரசு அரசு கூட கரோனா அறிகுறி உள்ளவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த நிலையில் கேரள மாநிலம் சற்று வித்தியாசமாக 28 நாட்கள் தனிமைப்படுத்தியது. தென்கொரியாவைப் பின்பற்றி மக்களைத் தேடிச்சென்று மிக அதிக அளவில் பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தியது கேரள அரசு.

கடந்த 1-ம் தேதியிலிருந்து 3 பேர் மட்டுமே புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் இதுவரை 503 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டு, அதில் 484 பேர் குணமடைந்துள்ளனர், 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 16 பேருக்கு மட்டுமே சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கேரளாவில் கரோனா நோயாளிகளும், குணமடைந்தோர் சதவீதம் மிக அதிகமாகும், உயிரிழப்பு மிகக் குறைவாகும்.

கேரள மாநிலத்தின் வெற்றியாகக் குறிப்பிட வேண்டியது 93 வயது, 88 வயது தம்பதியை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியதுதான்.

இதனிடையே கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ட்விட்டரில் இன்று பதிவிட்ட கருத்தில், “கேரள மாநிலத்தில் முதல் கரோனா நோயாளி உருவாகி இன்றைய 100-வது நாளில், மாநிலத்தில் கரோனா எண்ணிக்கையை வெளிப்படுத்தும் வரைகோட்டை சமநிலைக்குக் கொண்டுவந்துவிட்டோம். தற்போது மாநிலத்தில் 16 கரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ஜனவரி மாதத்திலிருந்து கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை கேரள அரசு குறைத்துள்ளது. ஜனவரி 30-ம் தேதி முதல் கரோனா நோயாளி கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பின் மாநில அரசின் தீவிரமான செயல்பட்டால் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுத்துள்ளோம். மார்ச் மாதம் 2-வது கட்ட அலை தொடங்கியது. இரு மாதங்களில் கரோனா எண்ணிக்கை வரைகோட்டை சமநிலைக்குக் கொண்டுவந்துவிட்டோம்.

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உலக அளவில் கேரளாவில்தான் அதிகம். மூன்றாம் கட்டத்துக்குச் செல்லாமல் நாங்கள் தவிர்த்துவிட்டோம். எந்த சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தோம். அடுத்து ஆயிரக்கணக்கான கேரள மாநிலத்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து வர உள்ளதால், இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x