Last Updated : 08 Feb, 2020 11:12 AM

 

Published : 08 Feb 2020 11:12 AM
Last Updated : 08 Feb 2020 11:12 AM

'மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம்': அரவிந்த் கேஜ்ரிவால் நம்பிக்கை;டெல்லி் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, காலை 10மணி நிலவரப்படி 5.64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தனது குடும்பத்தினருடன் வந்திருந்து வாக்குப்பதிவு செய்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், " மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் 1.47 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க இருக்கிறார்கள், 672 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வாக்களித்துவிட்ட வந்த காட்சி : படம் ஏஎன்ஐ

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்று ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை தெரிவிக்கிறது. அதேசமயம், 1998-ம் ஆண்டுக்குப்பின் டெல்லியைக் கைப்பற்ற முடியாமல் தவிக்கும் பாஜகவும் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாகக் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்துள்ளது.

இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து அனைத்து வாக்கப்பதிவு மையங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மையங்களில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்கும் வகையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இன்று காலை 10 மணி நிலவரப்படி 5.64 சதவீதம் வாக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன.

டெல்லி ஜாமியா பகுதியில் மக்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்த காட்சி : படம் ஏஎன்ஐ

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மேற்குவங்க எம்.பி. பர்வேஷ் வர்மா, டெல்லி பாஜக மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி ஆகியோர் வாக்களித்தனர்

முதல்வர் கேஜ்ரிவால் குடும்பத்தினருடன் வாக்களித்த காட்சி

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பாஜக தேசியச் செயலாளர் ராம் லால் ஆகியோர் நிர்மான் பவன் அருகே இருக்கும் வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தனர்.

மத்திய அமைச்சர்கள் ஹர்ஸ வர்த்தன், ஜெய் சங்கர், பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள், பாஜக தலைவர் பர்வேஷ் சாஹிப் சர்மா ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கியதும் குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் 3,704 வாக்குப்பதிவு மையங்களில் 516 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வெப் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் கேஜ்ரிவால் அவரின் மனைவி சுனிதா, மகன் புல்கித் ஆகியோருடன் ராஜ்புரா போக்குவரத்து ஆணையம் வாக்குப்பதிவு மையத்தில் சென்று வாக்களித்தார்.

முதல்வர் கேஜ்ரிவால் நிருபர்களிடம் கூறுகையில், " மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சி அமைப்போம். மக்கள் எங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய மதிப்பு அளித்து மீண்டும் ஆட்சியில் அமரவைப்பார்கள் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார். ட்விட்டரில் அவர் தெரிவித்த கருத்தில் " அனைத்து பெண்களும் வாக்களியுங்கள். உங்கள் வீட்டில் எவ்வாறு பொறுப்பு இருக்கிறதோ அதேபோல நாடும், இந்த டெல்லியிலும் உங்களுக்குப் பொறுப்பு இருக்கிறது" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x