

சீனாவில் கதிகலங்க வைத்துவரும் கரோனா வைரஸில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கச் செல்லும் போது பாகிஸ்தான் மாணவர்களையும் மீட்டு வருகிறோம் என்று பிரதமர் மோடி உதவிக்கரம் நீட்டியதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதில் அளிக்காமல் விட்டுவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் வுஹான் நகரை மையமாக வைத்து கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதுவரை சீனாவில் 722 பேர் பலியாகியுள்ளனர், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில் ஹூபே மாநிலத்தில் உள்ள வுஹான் நகரில் படித்து வந்த 650-க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு இறங்கியது.
இதற்காக இரு ஏர் இந்தியா விமானங்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்த இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு வந்தது. இந்த மாணவர்கள் அனைவரும் தற்போது டெல்லி அருகே மனேசரில் உள்ள மருத்துவக் கண்காணிப்பு மையத்தில் உள்ளனர்.
இதற்கிடையே மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டதால், சீனாவில் சிக்கி இருந்த மாலத்தீவு நாட்டவர்கள் 7 பேரை மத்திய அரசு மீட்டு வந்தது.
அப்போது சீனாவில் ஏராளமான பாகிஸ்தான் மாணவர்களும் தங்கி இருந்தனர். அவர்களையும் மீட்க மத்திய அரசு எண்ணியது. இதற்காகப் பிரதமர் மோடியின் அறிவுரையின் பேரில் மத்திய அரசு சார்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் முறைப்படி கோரப்பட்டது.
அதாவது சீனாவில் சிக்கி இருக்கும் பாகிஸ்தான் மாணவர்களை மனித நேயத்துடன் மீட்டு வருகிறோம் என்று மத்திய அரசு சார்பில் கோரப்பட்டும், அதற்கு பிரதமர் இம்ரான் கான் தரப்பில் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பாகிஸ்தானுக்குள் பல்வேறு குழப்பங்களும், பொருளாதாரச் சிக்கல்களும் நிலவுவதால், அங்கிருந்த எந்த தகவலும் மத்திய அரசுக்கு வரவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு செய்த பின் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளார். சர்வதேச அளவில் இந்தியா குறித்து தவறான குற்றச்சாட்டுகளையும், பொய் பிரச்சாரங்களையும் பரப்பி வருகிறார்.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட நினைத்த இம்ரான் கான் திட்டம் தோல்வி அடைந்தது. இந்தியாவுக்கு எதிராக நாடுகளை ஒருங்கிணைக்கும் இம்ரான் கான் திட்டமும் தோற்றுப்போனது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக இம்ரான் கான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததால், அந்நாட்டு ராணுவம் கடும் அதிருப்தியில் இருக்கிறது.
தவறவிடாதீர்...