Published : 31 Jul 2019 09:36 AM
Last Updated : 31 Jul 2019 09:36 AM

ஹரியாணா காங்கிரஸ் தலைவருக்கு ரூ.200 கோடி வெளிநாட்டு சொத்துகள்: வருமான வரி சோதனையில் கண்டுபிடிப்பு

புதுடெல்லி

ஹரியாணா காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷோனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் பிஷோனிக்கு ரூ.200 கோடி வெளிநாட்டு சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் மகன் குல்தீப் பிஷோனி. ஹரியாணாவின் ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வாக உள்ளார். குல்தீப் பிஷோனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக ஹரியாணா, டெல்லி மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 13 இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 23-ம் தேதி சோதனை நடத்தினர்.

இதுதொடர்பாக வருமான வரித்துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “ஹரியாணாவில் பொறுப்பான அரசியல் பதவிகளில் இருந்து வரும் குல்தீப் பிஷோனி குடும்பத்தினர் பல தசாப்தங்களாக பெருமளவு கறுப்புப் பணம் திரட்டி வந்துள்ளனர். அசையா சொத்துகள் பரிவர்த்தனை, கட்டுமானப் பணி என பலவகையிலும் கணக்கில் காட்டப்படாத பணம் பெருமளவில் புழக்கத்தில் இருந்தது, இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள் மூலம் தெரியவருகிறது.

இவர்கள் ரூ.30 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளனர். இவர்களுக்கு ரூ.200 கோடிக்கு மேல் வெளிநாட்டு சொத்துகள் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், பனாமா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்த சொத்துகள் உள்ளன. பல தசாப்தங்களாக இவர்கள் வெளிநாட்டு சொத்துகளை மறைத்து வந்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, “குல்தீப் பிஷோனியை பிற துறைகளும் விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சோதனையில் அவருக்கு எதிராக கிடைத்த ஆதாரங்கள், அமலாக்கத் துறை மற்றும் பிற அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும்” என்றனர்.குல்தீப் பிஷோனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x