Last Updated : 04 May, 2015 08:41 AM

 

Published : 04 May 2015 08:41 AM
Last Updated : 04 May 2015 08:41 AM

ஐஎஸ் இயக்கத்துக்கு ஆட்களை திரட்டிய ஆப்கானிஸ்தான் வர்த்தகருக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி வலை

ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) தீவிரவாத இயக்கத்துக்கு, மும்பை யில் இளைஞர்களை திரட்டிய ஆப்கானிஸ்தான் வர்த்தகரை, இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் தேடி வருகின்றனர். அவருடைய முழு விவரங்களையும் அளிக்க வேண்டும் என்று ஆப்கன் அரசிடம் கேட்டுள்ளனர்.

சிரியாவில் பயங்கர கொடூரங்கள் இழைத்து வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்குப் பல நாடுகளில் இருந்து இளைஞர்களை தேர்வு செய்தனர். இதனால் உலக நாடுகள் கவலை அடைந்தன. இந்நிலையில் மும்பையில் இருந்து சிலர் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ள தகவல் வெளியானது. இதுகுறித்து புலனாய்வு துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் மும்பை அருகில் உள்ள கல்யாண் என்ற பகுதியைச் சேர்ந்த ஆரிப் மஜீத் என்பவர் உட்பட 4 இளைஞர்கள் புனிதப் பயணம் செல்வதாகக் கூறி இந்தியாவை விட்டு சென்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் திடீரென காணாமல் போனார்கள். இதையடுத்து, அவர்கள் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸார் விசா ரணை நடத்திய போது, இளைஞர்கள் 4 பேரும் முதலில் பாக்தாத் நகருக்கு சென்றுள்ளனர். இராக்கில் 6 மாதங்கள் தங்கி உள்ளனர். அதன்பின் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கான சில ஆதாரங்களை மஜீத்தின் இமெயில் விவரங்களை வைத்து அமெரிக்கா கண்டுபிடித்து இந்திய அரசுக்குத் தகவல் அளித்தது. இதற்கிடையில் துருக்கியில் இருந்து மஜீத் நாடு கடத்தப்பட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி மும்பை வந்திறங்கிய மஜீத்தை புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில், இந்தியாவில் உலர்ந்த திராட்சை போன்ற உலர்ந்த பழங்களை விற்கும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த வர்த்தகர் ஒருவர்தான், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்காக மும்பையில் இளைஞர்களுக்கு வலை விரித்தது தெரிய வந்தது.

மும்பை அருகில் உள்ள கல்யாண் பகுதிக்குச் சென்ற ஆப்கன் வர்த்தகர், அங்குள்ள இளைஞர்களை மூளைச்சலவை செய்துள்ளார். அதன் பிறகுதான் மஜீத் உட்பட 4 பேர் சென்றது தெரிய வந்துள்ளது. உடனடியாக வர்த்தகர் குறித்து விசாரணை நடத் தினர். ஆனால், அவர் இந்தியாவை விட்டுச் சென்றுவிட்டது தெரியவந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் ஆரிப் மஜீத்தை, புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்த தகவல் வெளியான பிறகு மர்மமான முறையில் அந்த ஆப்கன் வர்த்தகர் மாயமாகி உள்ளார்.

இந்த வழக்கில், வர்த்தகர் குறித்த முகவரி, வங்கிக் கணக்குகள் உட்பட முழு விவரங்களையும் தெரிவிக்கும்படி ஆப்கன் அரசை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக சட்ட ரீதியிலான நீதிமன்ற கடிதத்தையும் ஆப்கன் அரசுக்கு அனுப்பி உள்ளனர். இதற்கு மத்திய உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x