Last Updated : 26 Apr, 2015 08:54 PM

 

Published : 26 Apr 2015 08:54 PM
Last Updated : 26 Apr 2015 08:54 PM

இந்திய ராணுவத்தின் ஆப்பரேஷன் மைத்ரி தீவிரம்: நேபாளத்தில் இந்தியர்களை விரைந்து மீட்க பிரதமர் உத்தரவு

'ஆப்பரேஷன் மைத்ரி (நட்பு) எனப் பெயரிட்டுள்ள இந்திய ராணுவத்தின் நேபாள நிலநடுக்க மீட்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக தொடர்ந்தது.

இதனிடையே, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டமானதில் சிக்கியும், மண்ணில் புதைந்துமாக உயிரிழந்தோர் எண்ணி்கைக 2,000 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பிஹார் உள்ளிட்ட வட இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

நேபாளம் மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் அடுத்தடுத்த நில அதிர்வுகளும் ஏற்பட்டன.

1,050 இந்தியர்கள் மீட்பு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 1,050 பேர் மீட்கப்பட்டு நாடு திரும்பியுள்ளனர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மூலம் அவர்கள் நாடு திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தகவலை ட்விட்டரில் பகிர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், "நேபாளத்தில் சிக்கி தவித்த இந்தியர்களுடன் காத்மாண்டிலிருந்து புறப்பட்ட விமானங்கள் நாடு திரும்பின. மேலும் அங்கு சிக்கி உள்ளவர்களை மீட்பதற்காக கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்.

நேபாளத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் அல்லது மின்னஞ்சல் மூலம் இந்த அறையை தொடர்பு கொள்ளலாம். இதுதவிர கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்வதற்காக மாநில வாரியாக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன" என்றார்.

மோடி அவசரக் கூட்டம்

பிரதமர் மோடி உத்தரவு

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்து நிவாரண, மீட்பு நடவடிக்கைகள் எப்படி நடக்கின்றன என்பதை ஆய்வு செய்வதற்காக கூட்டம் கூட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. ஞாயிற்றுக்கிழமை நடந்த அந்த அவசர ஆலோசனை கூட்டத்தில், மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

மேலும், இந்தியாவில் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கான நிவாரண உதவித் தொகையை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளதாகவும் பிரதமர் அலுவலகத்தின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.

'ஆப்பரேஷன் மைத்ரி' தீவிரம்

'ஆப்பரேஷன் மைத்ரி (நட்பு) எனப் பெயரிட்டுள்ள இந்திய ராணுவத்தின் நேபாள நிலநடுக்க மீட்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக தொடர்ந்தது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் நேபாளம் விரைந்துள்ளனர். ஏற்கெனவே ஏராளமான அளவு நிவாரணப் பொருட்களை இந்தியா நேபாளத்துக்கு அனுப்பியுள்ளது. இதுதவிர, அத்தியாவசியப் பொருட்களை இந்திய விமானப்படை நேபாளத்துக்கு அனுப்பியுள்ளது. மேலும் அங்கு சிக்கியுள்ள 500 இந்தியர்களை சனிக்கிழமை இரவு காத்மண்டுவிலிருந்து பத்திரமாக அழைத்து வந்துள்ளது.

இந்திய ராணுவ அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சிதான்ஸு கர் கூறும்போது, "ஏராளமான அளவு மீட்பு மற்றும் நிவாரண உபகரணங்கள், நிபுணர்களை அனுப்பும் பணியை இரண்டாவது நாளும் தொடர்கிறோம். இன்று காத்மண்டுவுக்கு 10 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். இந்த விமானங்கள் மூலம் ராணுவ மருத்துவமனைகள், பொறியியல் கட்டுமான பிரிவினர், குடிநீர், உணவு, தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர், மருத்துவ குழுவினர், உபகரணங்கள், போர்வைகள், கொட்டகைகள் உள்ளிட்டவை நேபாளத்துக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றன" என்றார்.

இதனிடையே, 13 ராணுவ விமானங்கள், 3 பயணிகள் விமானங்கள் இந்தியாவில் இருந்து இயக்கப்படும் என்றும், 5 ராணுவ விமானங்கள் காத்மாண்டுவில் இறக்கப்பட்டுவிட்டது என்றும் வெளியுறவுச் செயலர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் உறுதி

அதேவேளையில், "நேபாளமோ, மாலத்தீவுகளோ எந்த நாடாக இருப்பினும் மிகப் பெரிய அண்டை நாடு என்ற வகையில், அந்நாடுகளுக்கு தேவையேற்பட்டபோது உடனடியாக முதல்நபராக எதிர்வினையாற்றுவதுதான் இந்திய அரசின் நோக்கம்" என்றார் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர்.

பேரிடர் மேலாண்மையின் மீட்புப் பணிகள்

நேபாளத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவிலிருந்து சென்ற மீட்புப்படையினர் உள்ளூர் அதிகாரிகளுடன் மீட்புப் பணிகளை ஒருங்கிணைந்து நடத்துவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவர் ஓ.பி.சிங் நேபாளம் விரைந்துள்ளார். காத்மாண்டு போய்ச்சேர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் 7 தேசியபேரிடர் மேலாண்மை குழுவினருடன் இணைந்து மேற்பார்வை பணிகளை அவர் மேற்கொள்வார்.

இதனிடையே, இந்தியாவிலிருந்து சென்ற 18 பேர் அடங்கிய 14 வயதுக்குட்பட்ட கால்பாந்து வீராங்கனைகள் குழுவினர் நேபாளத்தில் சிக்கியுள்ளனர் என்றும், அவர்களை மீட்டு வர முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டார் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா துரித உதவி

நிலநடுக்கத்தால் பேரழிவுக்கு உள்ளான நேபாளத்துக்கு இந்தியா விரைவாக உதவி செய்ததாக விமானப் படை அதிகாரி அருப் ராஹா தெரிவித்தார்.

நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மீட்பதி்ல் உதவிட இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக பஸ்கள், ஆம்புலன்ஸ்களை ஈடுபடுத்தியுள்ளது. இதற்கான முடிவு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

மேலும், நேபாளத்துக்கு உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவிட மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை பிரிவிலிருந்து 300 பேரை அனுப்ப ராஜ்நாத்சிங் உத்தரவிட்டார். ஏற்கெனவே நேற்று 460 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

நேபாளத்தில் சிக்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நல்லெண்ணவிசா வழங்கி அவர்களை விரைவாக மீட்க உதவும்படி குடியேற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை தொடர்பு கொண்டு பேசிய ராஜ்நாத் சிங், நேபாளத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க உதவிட பஸ்கள், ஆம்புலன்ஸுகளை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

குவியும் உதவிகள்:

நேபாளத்தில் மின்சாரம், தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக தடைபட்டுள்ளது, மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. சடலங்களை இருப்பு வைக்கவும் இடம் இல்லை என்று ஆக்ஸ்பாம் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாகி ஹெலன்சோக் தெரிவித்தார். நில நடுக்கம் காரணமாக அடிப்படை கட்டமைப்புவசதிகள் நாசமாகிவிட்டன.

இந்நிலையில், நேபாளத்துக்கு அண்டை நாடுகளிலிருந்து விமானங்களில் உதவி, நிவாரணப்பொருள்கள் குவிகின்றன. பொழுது விடிந்ததும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. பல இடங்களில் மின்சாரம், குடிநீர் இல்லை. மருத்துவமனைகளில் அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நேபாள நிலநடுக்க பாதிப்பு தொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர உதவி எண்கள்:

+91 11 2301 2113

+91 11 2301 4104

+91 11 2301 7905



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x